குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் முக்கிய மாநிலங்களவைத் தேர்தலுக்கான வியூகங்களைத் தயாரித்து வரும் நிலையில், பாஜகைவை எதிர்ப்பதில் பிராந்திய கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. அதில், சில கட்சிகள் பாஜகவுடன் நட்பு பாராட்டிவருகிற போதிலும், தேர்தல் கட்டாயத்தின் காரணமாக எதிர்க்க வேண்டியுள்ளது, பாஜகவுக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், 2022-ஆம் ஆண்டு பிற்பகுதியில் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இந்தாண்டு மாநிலங்களவையில் காலியாக உள்ள 75 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
குடியரசுத் தலைவர் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய அமர்வால் தேர்வு செய்யப்படுவார். அதே போல், மாநிலங்களவை எம்பிக்கள், குறிப்பிட்ட மாநில சட்டப்பேரவை எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிராந்திய கட்சிகளின் ஆதிக்கத்தால் ஏற்படும் மாற்றம், குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் ராஜ்யசபாவின் கணக்கீடுகளை மாற்றியமைக்கும் என மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான இடத்தை ஏற்படுத்த அதிக அளவில் கட்சிகள் ஒன்று திரள்கிறது. பாஜகவுக்கு எதிராக பிராந்தியக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அது எப்படி இருக்கும் என்பதை எங்களால் கணிக்க முடியாது. ஆனால் கட்சி இதை உணர்ந்து செயல்படுகிறது” என்றார்.
இந்தாண்டு காலியாக இருக்கும் 75 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களில், 11 உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவை ஆகும். எனவே புதிதாக அமைக்கப்படும் சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி பலம் முக்கியமானதாக இருக்கும். ஏழு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் ஆவர். அங்கு பாஜக சிறிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்து பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தலா ஆறு இடங்கள் உள்ளன. இங்கு பாஜகவுக்கு எதிரான கட்சிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், ஆந்திராவில் நான்கு இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 75 நாடாளுமன்ற தொகுதிகளில், 26 இடங்கள் தற்போது பாஜக கைவசம் உள்ளன. மாநிலங்களவையில் தனது சொந்த பலத்தை பெரிய அளவில் அதிகரிக்க கட்சி எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதன் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் என்று பாஜக தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
237 உறுப்பினர்களைக் கொண்ட மேல்சபையில் தற்போது பாஜகவுக்கு 97 எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடனும் மாநிலங்களவை பலமுடன் இருந்தாலும், முக்கிய சட்டத்தை நிறைவேற்ற பிராந்திய கட்சிகளின் ஆதரவை பா.ஜ.கவுக்கு தேவைப்படுகிறது.
அண்மையில் முடிந்த குளிர்கால கூட்டத்தொடர், பாஜகவுக்கு சிறிய கட்சிகளின் ஆதரவு பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர்சிபி பாஜக பக்கம் நின்றாலும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி(டிஆர்எஸ்) மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) போன்ற கட்சிகள் பாஜகவிடமிருந்து தள்ளி இருந்தது தெளிவாக தெரிந்தது.
அமர்வின் ஆரம்ப நாட்களில், டிஆர்எஸ் எம்பிக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.
பின்னர் நெல் கொள்முதல் விவகாரம் தொடர்பாக அமர்வைப் புறக்கணித்தனர்.
தொடர்ந்து, பிஜேடி எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து, விவாதம் இல்லாமல் மசோதாக்களை அரசாங்கம் நிறைவேற்றுவதாக குற்றச்சாட்டினர்.
சமீபத்தில், கட்சியின் 25வது நிறுவன தினத்தில் தொண்டர்களிடம் பேசிய பட்நாயக், டெல்லியில் தனது கட்சிக்கு முதலாளிகள் இல்லை. ஒடிசா மக்கள் தான் பிஜேடியின் முதலாளிகள் என வெளிபடையாக பாஜகவுக்கு எதிர்ப்பை பதிவு செய்தார்.
தென் மாநிலங்களில் பணியாற்றும் பாஜக அலுவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ” தேர்தல் வரவுள்ள சமயத்தில், டெல்லியில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட விதத்தை டிஆர்எஸ், பிஜேடி போன்ற கட்சிகள் பாராட்டாது. அந்தந்த மாநிலங்களில் பாஜக அவர்களுக்கு முக்கிய போட்டியாக உள்ளது.
. உண்மையில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானாவில் கே.சந்திரசேகர் ராவ், புவனேஸ்வரில் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு எங்கள் கட்சியுடன் பிரச்னை உள்ளது. ஆனால் ஆந்திராவில் அந்தளவு எதிர்ப்பு இருக்காது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தவறினால், பிராந்தியக் கட்சிகளின் கடுமையான நிலைப்பாடுகளை பாஜக மூத்த தலைவர்கள் கணித்துள்ளனர். அச்சமயங்களில், பட்நாயக் மற்றும் ராவ் போன்ற தலைவர்கள் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடத்தைப் பிடித்திட மற்றவர்களுடன் இணைவார்கள்” என்றார்.