வெங்காயம் ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்க முடிவு செய்ததன் மூலம், மகாராஷ்டிராவில் விவசாயிகளின் போராட்டத்திற்கு வழிவகுத்த மோடி அரசாங்கம், சேதத்தை விரைவாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
வரி விதிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று செவ்வாயன்று கூறுகையில், இரண்டு கூட்டுறவு அமைப்புகள் NAFED (தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு) மற்றும் NCCF (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகியவைகள் இணைந்து கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் வரலாற்றில் இதுவரை இல்லாத விலையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,410 என்ற விலையில் வாங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார்.
செவ்வாய்க்கிழமை கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 17-ம் அன்று ஏற்றுமதி வரி விதிப்பு மற்றும் கூடுதல் கொள்முதல் செய்தல் ஆகிய இரண்டு முடிவுகளும் ஒரே நாளில் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் செய்தியாளர் சந்திப்பின் போது அவருடன் அம் மாநில வேளாண் துறை அமைச்சர் தனஜெய முண்டே உடன் இருந்தார். கோயல் கூறுகையில், ஆகஸ்ட் 17 அன்று, இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலில், வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிப்பது மற்றும் இரண்டாவதாக NCCF மற்றும் NAFED இந்த ஆண்டு கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.
NCCF மற்றும் NAFED ஆகியவை கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்யும் என்று கோயல் கூறினார். "விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவரும் எங்களுக்கு விலைமதிப்பற்றவர்கள்," என்றும் அவர் கூறினார்.
தக்காளி விலை ஏற்றத்தை தொடர்ந்து வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 30-35 ரூபாயில் இருந்து 45-60 ரூபாயாக உயர்ந்ததை அடுத்து, மத்திய அரசு ஏற்றுமதி வரியை விதித்தது.
மகாராஷ்டிராவில் விவசாயிகள் போராட்டம் பற்றிய கேள்விக்கு கோயல் கூறுகையில், நாங்கள் மாநில அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார். துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜப்பானில் இருந்து வந்தப் பின் அவருடன் இதுகுறித்து பேசுவோம்.
மகாராஷ்டிரா விவசாய அமைச்சர் தனஞ்சய் முண்டே மற்றும் பிற அமைச்சர்களும் உடன் கலந்து கொள்வர். நாசிக் பகுதியைச் சேர்ந்த சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பவார் கடந்த மூன்று நாட்களாக என்னுடன் தொடர்பில் உள்ளார் என்றார்.
கோயல் மேலும் கூறியதாவது: சில கருத்துகள் தவறான பார்வையை முன்வைத்து பீதியை ஏற்படுத்த முயற்சிப்பதாக நான் நினைக்கிறேன். மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் வெங்காயம் விளையும் பிற பகுதிகளில் உள்ள மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று நான் உறுதியளிக்கிறேன். அவர்கள் உற்பத்திக்கு சரியான விலை பெறுவார்கள்.
இந்த கருத்துகளை கூறுவது யார் என்று கேட்டதற்கு, கோயல் யாரையும் குறிப்பிடவில்லை, ஆனால் "அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார்கள். நாட்டின் நலன் மற்றும் விவசாயிகளின் நலன் அவர்களுக்கு அவசியமில்லை என்றார்.
மகாராஷ்டிராவில் இப்போது சுமார் 20 கொள்முதல் மையங்களும், மத்தியப் பிரதேசத்தில் நரசிங்பூருக்கு அருகிலுள்ள ஷாபூரில் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளன.
உலகில் வெங்காயம் அதிகம் பயிரிடும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. விளைபொருளில் 42% மகாராஷ்டிராவில் உள்ளது. வெங்காயம் உற்பத்தி செய்யும் மற்ற மாநிலங்கள் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், பீகார், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தெலுங்கானா உள்ளது.
மத்திய அரசின் வரி விதிப்புக்கு மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவைத் தாக்கினர். மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே, “பாஜக எப்போதும் விவசாயிகளின் பிரச்சினைகளை கவனிப்பது இல்லை. அவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே அளவுகோல். பல மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏற்றுமதி வரி முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
பா.ஜ.க அரசின் ஏற்றுமதி வரி முடிவை விமர்சித்தவர்களில், அதன் கூட்டணி அமைப்பான ராயத் கிராந்தி சங்கதானாவும் ஒன்று. முன்னாள் அமைச்சர் சதாபாவ் கோட் தலைமையிலான விவசாய அமைப்பாகும். இந்த முடிவை அரசாங்கம் இரண்டு நாட்களில் திரும்பப் பெறாவிட்டால் மும்பைக்கு டிராக்டர் பேரணி நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.