’சிறுமியிடம் அத்துமீறிய காங்கிரஸ் கட்சி தலைவரை தாக்கிய பெண்கள்' எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகியது. இந்த வீடியோவில் இருக்கும் தகவலின் உண்மைத் தன்மையை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அந்தப் பதிவில், "காத்து வாக்குல வந்த செய்தி: ஹாரியானவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்.,’’ என்று பதிவிடப்பட்டது இருந்தது.
இந்த வீடியோ தொடர்பாக, தகவல் தேடப்பட்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக, விவரம் கிடைத்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், மண்டி மாவட்டத்தின் கோட்லி தாலுகாவிற்கு உட்பட்ட சர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக நிலத்தின் உரிமையாளருக்கும், மகிளா அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் பற்றி அறிய கோட்லி சௌகி போலீஸ் நிலையத்தை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் சார்பில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ‘’இது பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் கிடையாது. சாலை விரிவாக்கப் பணி ஒன்று தொடர்பாக நடைபெற்ற மோதல். அப்போதே, இரு தரப்பும் புகார் செய்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். உண்மை தெரியாமல், சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றி தவறான தகவலை யாரும் பகிர வேண்டாம்,’’ என்று தெரிவித்துள்ளனர்.
2021ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடந்த சம்பவத்தை எடுத்து, ஹரியானாவில் பாலியல் குற்றம் காரணமாக நிகழ்ந்த மோதல் என்று கூறி வதந்தி பரப்புகின்றனர் என்றும், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்றும் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“