Fact Check | Pm Modi: “திருமணத்தை மறைத்த திருடனின் திருமண புகைப்படம்", "நல்லாருந்த பல கோடி இந்திய மக்களை ஏழையாக்கிய திருடன்” எனக் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newschecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
பிரதமர் மோடியின் திருமண படம் எனக் குறிப்பிடப்பட்ட அந்தப் படத்தை ரிவர்ஸ் சர்ச் (reverse image search) முறைக்கு உட்படுத்தி தேடியுள்ளார்கள். இந்தத் தேடலில் ஏ.பி.வி.பி-யின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌகான் வைரலாகும் புகைப்படம் மோடியின் திருமணப் படமல்ல என தெளிவுப்படுத்தி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், வைரலாகும் அந்தப் படத்தில் பிரதமர் மோடியின் அருகில் இருப்பவர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகள் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்ததையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பான தொடர் தேடலில், குஜராத் ஓ.பி.சி அணியின் முன்னாள் தலைவரும், ஹேமந்த் சப்பத்வாலாவின் மகனுமான கேயூர், 1994 ஆம் ஆண்டில் அவரது சகோதரி ஆல்பாவின் திருமணத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்தி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை கண்டறிந்தும் உள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் திருமண படம் என்று சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம், உண்மையில் குஜராத் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சப்பத்வாலாவின் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்டது என்றும், இதனை ஆதாரப்பூர்வமாகவும் நிரூபித்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Newschecker.in ) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“