பிரசார மேடையில் ஒருவர் தவறி விழும் புகைப்படத்தை மோடி (PM Modi) விழுந்தது என்று குறிப்பிட்டு சிலர் அதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில், இந்தப் பதிவின் உண்மைத் தன்மையை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் (Fact Crescendo) இணைய பக்கம் ஆய்வு செய்தது.
மோடி போன்று ஆடை அணிந்த நபர் ஒருவர் மேடை ஏறும் போது தவறி விழும் வீடியோ எக்ஸ் தளம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் அந்த நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் பதிவில், “400 கவிழ்ந்த காட்சி ஸ்டேஜ்க்கு அடில தேடுறானோ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
இது குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தனது இணைய பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி பிரசார மேடையில் தவறி விழுந்ததாக எந்த செய்தியும் இல்லை. அப்படி அவர் விழுந்திருந்தால் அது பெரிய செய்தியாகியிருக்கும். அதே நேரத்தில் வீடியோவில் உள்ளவர் மோடி என்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெளிவாகத் தெரிகிறார். ஆனால், அவருக்கு முன்னால் செல்லும் நபர் முகம் சரியாகத் தெரியவில்லை. அவர் அணிந்திருக்கும் ஆடை, யோகிக்கு முன்பாக கம்பீரமாக மேடை ஏறும் காட்சி… மேடை ஏறும் போது “மோடி, யோகி ஜிந்தாபாத்” என்று கோஷம் எழுப்பப்படுவது எல்லாம் அந்த நபர் மோடி என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது." என்று தெரிவிக்கிறது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Fact Crescendo) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
400 கவிழ்ந்தது, மேடைக்கு அடியில் தேடுகிறாரா என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் மறைமுகமாக மோடி விழுந்தார் என்பது போன்ற தோற்றத்தை இந்த பதிவு ஏற்படுத்தும் நிலையில், அது என்ன வீடியோ என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் இணைய பக்கம் ஆய்வு செய்தது.
வீடியோவில் தவறி விழுந்த நபருக்கு பின்னால் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகிறார். தவறி கீழே விழுந்த நபரைப் பார்த்து அவருக்கு எந்த பதற்றமும் ஏற்படவில்லை. அவரை தூக்கிவிடவும் முயலவில்லை. பாதுகாவலர்களைப் பார்த்துத் தூக்கி விட சொல்வது போல் உள்ளது. மோடி விழுந்திருந்தால் ஓடிப்போய் தூக்கியிருப்பார். எனவே, கூகுளில் உத்தரப்பிரதேச பிரசார மேடையில் தவறி விழுந்த பா.ஜ.க நிர்வாகி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடப்பட்டது
இந்த தேடலில் விழுந்த நபர் உத்தரப்பிரதேசம் பா.ஜ.க எம்.பி ஜகதாம்பிகா பால் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் உத்தரப்பிரதேச மாநிலம் டோமரியகஞ்ச் தொகுதி எம்.பி-யாக உள்ளார். மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட சித்தார்த் நகர்ப் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள யோகி வந்த போது இந்த நிகழ்வு நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள், வீடியோக்களும் கிடைத்துள்ளன.
அவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கீழே விழுந்த நபர் யார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. அப்படிக் குறிப்பிட்டிருந்தால் விழுந்தது மோடி என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்காது. உண்மையை மறைத்து, 400 விழுந்தது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தவறான புரிதலை இந்த பதிவு ஏற்படுத்தியிருப்பது உறுதியாகிறது.
பிரசார மேடையில் தவறி விழுந்தது யார் என்று குறிப்பிடாமல் மோடி விழுந்தது போன்று தோற்றம் ஏற்படும் வகையில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் இருக்கும் நபர் பா.ஜ.க எம்.பி ஜகதாம்பிகா பால் என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்தது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் இணைய பக்கம் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான உண்மைச் சரிபார்ப்பு (Fact Crescendo) இணையதளத்தால் செய்யப்பட்டது மற்றும் சக்தி கூட்டுக்குழு (Shakti Collective) நமது இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.