போலிச் சான்றிதழ்கள் கொடுத்து டிஎஸ்பியான இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன்!

டிஎஸ்பி பதவியில் இருந்து கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்து அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு.

டி20 இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கௌர், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். 29 வயதான ஹர்மான்ப்ரீத் கௌர் 2017ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பஞ்சாப் மாநிலத்தில் டிஎஸ்பி பதவி வழங்கி சிறப்பித்தது பஞ்சாப் அரசாங்கம். ஆனால் மேற்கு ரயில்வேயில் வேலைப் பார்த்துக் கொண்டிந்த ஹர்மான்ப்ரீத், 5 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அதனால் அவரை வேலையில் இருந்து அனுப்ப மறுத்துவிட்டது ரயில்வே துறை.

பிரச்சனையை அறிந்து கொண்ட பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், ரயில்வே துறையிடம் பேசி அவரை பஞ்சாப் மாநிலத்தில் டிஎஸ்பியாக பணியில் அமர்த்தினார். இந்நிலையில், காவல் துறையினர் அவருடைய சான்றிதழ்களை மீரட் பல்கலைக்கழகத்திற்கு சரிபார்ப்பு பணிக்காக அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலி என்று கூறி அதிர்ச்சி அளித்தது மீரட் பல்கலைக்கழகம்.

இதனைக் கேள்விப்பட்ட பஞ்சாப் முதல்வர், ஹர்மான்ப்ரீத்தினை டிஎஸ்பி பதவியில் இருந்து பதவி இறக்கம் செய்து கான்ஸ்டேபிளாக பணியினைத் தொடர உத்தரவிட்டிருக்கிறார். இதைப் பற்றி அவர் பேசும் போது “எக்காரணம் கொண்டும் ஹர்மான் அவர்களுக்காக விதிகளை மாற்றி அமைக்க முடியாது. டிஎஸ்பியாக ஒருவர் பதவி  வகிக்க வேண்டும் எனில், அவர் நிச்சயமாக பட்டதாரியாக இருக்க வேண்டும். அவர் உயர்நிலைப் பள்ளிக் கல்வியினை முடித்தவர். பட்டதாரி படிப்பினை முடித்த பின்பு நிச்சயமாக அவரை டிஎஸ்பியாக பணி உயர்த்துவோம்” என்று குறிப்பிட்டார்.

இதைப் பற்றி ஹர்மான்ப்ரீத் கௌர் பேசுகையில் “சௌத்ரி சரன் சிங் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் போலி என்பது எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. என்னுடைய பயிற்சியாளர் தான் எனக்கு அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து சீட் வாங்கிக் கொடுத்தவர். அங்கு தேர்வுகள் பற்றி எந்தவிதமாகவும் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார். பட்டம் அளிக்கப்பட்ட போதும், எனக்கு அது போலியானவை என்று தோன்றவில்லை” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close