போலி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை : எதிர்ப்பையொட்டி, கைவிடப்பட்டது முடிவு

முதல்முறை தவறிழைப்பவரின் அங்கிகாரத்தை 6 மாதம் ரத்து செய்யலாம்

சந்திரன் ஆர்

‘போலியான செய்திகள் அதிகரித்துவிட்டது’ என, பரவலாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அண்மையில் களமிறங்கியது. தற்போது இத்துறையின் அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானியின் முயற்சியில் போலி செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என மத்திய அரசு யோசனை செய்தது. இது தொடர்பாக, தங்களது ஆலோசனைகளை வழங்கலாம் என, பத்திரிகையாளர்களின் சங்கங்களுக்கு செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறைக்கான அமைச்சர் ஸ்மிருதி இரானி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இதில் பெரிய அளவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

அமைச்சர் ஸ்மிருதி இரானி, இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி, ஒரு செய்தியாளர் போலியான செய்திகளை / தகவல்களை வெளியிட்டு வருவது நிருபிக்கப்படும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய அரசு சார்பில் முறையான அறிவிப்பும் வெளியானது. இதன்படி, போலியான செய்தியாளர் அல்லது செய்தி வெளியிடும் நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதல்முறை தவறிழைப்பவரின் அங்கிகாரத்தை 6 மாதம் ரத்து செய்யலாம் எனவும், இரண்டாவதாக மீண்டும் அதே நபர் தவறு செய்தால், அவரது அங்கிகாரத்தை ஓராண்டு ரத்த செய்யலாம் எனவும், அதன் பின்னரும் அவர் தொடர்ந்து தவறு செய்தால், அவரது அங்கிகராத்தை நிரந்தரமாகவே ரத்து செய்யலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசு தங்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் நபரையும், தொலைக்காட்சியையும் பழி வாங்க இந்த முடிவைப் பயன்படுத்துவார்கள் என, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. காங்கிரஸ் கட்சியின் அஹமது படேல், இது குறித்து பேசும்போது ஒரு செய்தி தவறானது.. அல்லது போலியானது என்பதை யார் முடிவு செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, எது போலி செய்தி என்பதை முடிவு செய்வது – அச்சு ஊடகமானால், இந்திய பிரஸ் கவுன்சில் எனவும், தொலைக்காட்சியானால், தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம் எனவும், அவர்கள் அரசு சார்பானவர்கள் இல்லை என்பதால், நியாயமான முடிவு எடுப்பார்கள் என நம்ப வாய்ப்புள்ளது எனவும் இரானி கூறியிருந்தார்.

இந்நிலையில், இவ்விஷயத்தில் எழும் கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி தலையிட்டார். இதன்படி, அரசின் அதிரடி யோசனையைத் திரும்ப பெறுவது எனவும், போலி செய்தி / செய்தியாளர் குறித்து, தற்போதைக்கு உடனடி நடவடிக்கை இல்லை எனவும், ஏற்கனவே வெளியான அறிவிப்பை நிறுத்தி வைப்பதாகவும் மத்திய அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close