கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் ஏழு வயது சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி குர்கான் போர்டிஸ் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
வெறும் இரண்டு வாரம் தங்கி சிகிச்சை பெற்ற அக்குழந்தைக்கு 15.6 லட்சம் ரூபாய் பில் போட்டுள்ளது, மருத்துவமனை. இந்த பில் தொகையில் 611 ஊசிகளும், 1546 கை உரைகளும் அடங்கும். இதனால் கோபம் அடைந்த பெற்றோர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
எழுவது சதவீத மூளை சிதைவு ஏற்பட்ட பின்னர் குழந்தை வெண்டிலேட்டரில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளார். “எம்அர்ஐ எடுக்க வேண்டும் என்று வெண்டிலேட்டரில் இருந்து என் குழந்தை எடுக்கப்பட்டார். அப்பொழுதே 70 சதவீத மூளை சிதைவு ஏற்பட்டது என்பது ஊர்ஜிகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த நிலையில் குழந்தையை மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றால் இறப்பு சான்றிதழ் அளிக்கப்படாது என தெரிவித்தனர்” என்கிறார் சிறுமியின் தந்தை ஜயனத் சிங். இந்நிலையில் மருத்துவர்கள் ஜயனத் சிங், மனைவியிடம் 15-20 லட்சம் செலவாக கூடிய முழு பிளாஸ்மா மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் ஜே பி நடா “அனைத்து தேவையான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என தன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள, போர்டிஸ் மருத்துவமனையின் பெருநிறுவன தொடர்பு தலைவர், “வழக்கமான மருத்துவ நெறிமுறைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளும் பின்பற்றப்பட்டன. பில் தொகை பொறுத்தவரை அனைத்து பில் விவரங்களுடன் 20 பக்கத்திற்கு தெளிவாக குழந்தையின் பெற்றோர்கள் இடத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஐசியூ பிரிவில் 15 நாள் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அச்சிறுமிக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை இங்கு சேர்க்கப்பட்ட முதல் நாளில் இருந்தே கவலைக்கிடமான நிலையில் தான் இருந்தது” என விளக்கம் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இந்த 15 நாட்களில் குழந்தைக்கு இயந்திர காற்றோட்டம், உயர் அதிர்வெண் காற்றோட்டம், தொடர்ச்சியான சிறுநீர் மாற்று சிகிச்சை, நரம்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இன்ட்ரோபஸ், தணிப்பு மற்றும் வலி நிவாரணி போன்ற பல தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. பொதுவாக ஐசியூவில் இருக்கும் நோயாளிகளுக்கு அதிக அக்கறையும் சிகிச்சையும் தேவை. அதற்கு ஏற்றவாறு தான் பில் தொகை செலுத்தியுள்ளோம்” என மருத்துவமனையின் நியாயத்தை விளக்கினார்.