/indian-express-tamil/media/media_files/2025/03/20/vEpqGqgjkJJCha4a6NQz.jpg)
பஞ்சாபில் போராடி வந்த விவசாயிகள் அமைத்த முகாம்களை போலீசார் இடித்து அகற்றி உள்ளனர். பஞ்சாபில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த ஏராளமான விவசாயிகள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து போராட்டட்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,சர்வான் சிங் பாந்தர் மற்றும் ஜக்ஜித் சிங் தல்லேவால் உள்ளிட்ட பல விவசாயத் தலைவர்கள் புதன்கிழமை இரவு, ஷம்பு மற்றும் கானௌரி போராட்ட இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மொஹாலியில் பஞ்சாப் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். ஷம்பு எல்லைப் போராட்ட இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, பஞ்சாப் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலால் விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று திடீரென போலீசார், விவசாயிகளை அப்புறப்படுத்தி கூடாரங்களையும் அகற்றினர். விவசாயிகளின் போராட்ட மேடையையும் போலீசார் அகற்றியதால்அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இடித்து அகற்றப்பட்ட கூடாரங்கள்:
மத்திய வேளாண் அமைச்சர் உட்பட மத்தியக் குழுவுடன் விவசாயிகள் குழு ஒரு சந்திப்பை நடத்தியதை தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது. சந்திப்பை தொடர்ந்து கானௌரி மற்றும் ஷம்பு எல்லைப் பகுதிகளுக்கு, விவசாய தலைவர்கள் சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியானா எல்லையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கூடாரங்களையும் பஞ்சாப் காவல்துறை இடித்தது. ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் புள்ளிகளுக்கு அருகிலும் பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பந்தேர் மற்றும் டல்லேவால் தவிர, அபிமன்யு கோஹர், காகா சிங் கோத்ரா மற்றும் மஞ்சித் சிங் ராய் ஆகியோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று விவசாயத் தலைவர் மங்கத் தெரிவித்தார்.
கானௌரி போராட்டக் களத்தில் இருந்த ஒரு விவசாயி, போலீசார் வந்தபோது சுமார் 500 பேர் அங்கு இருந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார் . "மார்ச் 21 அன்று புதிய விவசாயிகள் குழு வரவிருந்ததால் கூட்டம் குறைவாக இருந்தது," என்று அவர் கூறினார், இணைய வசதிகள் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் தளங்களிலிருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
காவல்துறை விளக்கம்:
சம்பவம் தொடர்பாக பாட்டியாலா டிஐஜி மன்தீப் சிங் கூறுகையில், "சம்பு எல்லையில் விவசாயிகள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இன்று, நீதிபதிகள் முன்னிலையில், அவர்களுக்கு முறையான எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னர் போலீசார் அந்த பகுதியை அகற்றினர். ஒரு சிலர் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். எனவே, அவர்கள் ஒரு பேருந்தில் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கூடுதலாக, இங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் வாகனங்கள் மாற்றப்படுகின்றன. முழு சாலையும் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்படும். ஹரியானா காவல்துறையும் தங்கள் நடவடிக்கையைத் தொடங்கும். எந்த எதிர்ப்பும் இல்லாததால் நாங்கள் எந்த பலத்தையும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் நன்றாக ஒத்துழைத்தனர், அவர்கள் தாங்களாகவே பேருந்துகளில் அமர்ந்தனர்" என தெரிவித்துள்ளார்.
மத்தியக் குழுவுடன் சந்திப்பு:
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்க, சண்டிகரில் விவசாயத் தலைவர்களுக்கும் மத்தியக் குழுவிற்கும் இடையே நேற்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் நலன்கள் மிக முக்கியமானது என்று கூறியபோதும், கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்படவில்லை.
3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பேச்சுவார்த்தை தொடரும் என்றும், அடுத்த கூட்டம் மே 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் விவசாயிகள் கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.