காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் மீது தனது தாக்குதலை செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தார். இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால், விவசாயிகளும் தொழிலாளர்களும் சில கார்ப்பரேட்களின் அடிமைகளாக மாற்றப்படுவார்கள் என்று கூறினார். ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பெஹோவாவில் தனது கெட்டி பச்சாவ் யாத்திரையின் இறுதி நாளில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் உரிமைகளை பறிப்பதாக குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி ஏராளமான விவசாயிகள் இருந்த கூட்டத்தில், “லட்சக்கணக்கான மக்கள் விவசாய வேலை செய்கிறார்கள். விவசாயம் இல்லாவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள். நீங்கள் இதை நம்புகிறீர்களோ இல்லையோ, உங்கள் நிலம் பறிக்கப்படும் என்று ராகுல் சொன்னதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.” என்று கூறினார்.
ஹரியானாவின் பஞ்சாபின் எல்லையில் போராட்டங்களுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பேரணி பெஹோவா மற்றும் பிப்லியை அடைந்தது. பாட்டியாலாவின் சனூரில் தனது கடைசி பேரணியை முடித்த பின்னர், ராகுல் காந்தி ஹரியானா எல்லையை அடைய ஒரு டிராக்டரை ஓட்டினார். ஆனால், பேரணி ஒரு மணி நேரம் பெஹோவா எல்லையில் உள்ள தியோகர் கிராமத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. மாநில அதிகாரிகள் இறுதியில் ராகுல் காந்தி உட்பட மூன்று டிராக்டர்களை அனுப்ப அனுமதித்தனர்.
ஹரியானா எல்லையில் காங்கிரஸ் தொண்டர்களின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ராகுல் காந்தி, பேரணியை தொடர அனுமதிக்காக பொறுமையாக காத்திருப்பேன் என்று கூறினார். “அவர்கள் எங்களை ஹரியானா எல்லையில் உள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தியுள்ளனர். நான் நகரவில்லை, இங்கு காத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 1 மணி நேரம், 5 மணி நேரம், 24 மணி நேரம், 100 மணி நேரம், 1000 மணி நேரம் அல்லது 5000 மணி நேரம் வரை காத்திருப்பேன்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஹரியானா தரப்பில், மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, மூத்த தலைவர்கள் பூபிந்தர் சிங் ஹூடா, ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, கிரண் சவுத்ரி, அஜய் சிங் யாதவ் மற்றும் அக்கட்சியின் ஹரியானா விவகார பொறுப்பாளர் விவேக் பன்சால் ஆகியோர் ஹரியானாவில் நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தியுடன் சென்றனர்.
பெஹோவாவில் நடந்த பேரணியில், ராகுல் காந்தி, ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளின் நிலம் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரே நிறுவனங்களால் கையகப்படுத்தப்படும் என்றார். இந்த இழப்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அல்லது சிறு வணிகர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட இழப்பு என்றார்.
“உங்கள் நிலம் போகும்போது, அவர்கள் மால்கள் மற்றும் குடியிருப்புகளைக் கட்டுவார்கள். இதுபோன்ற ஒரு விஷயம் நடக்க நாங்கள் விரும்பவில்லை. இது நடக்க காங்கிரஸ் அனுமதிக்காது. நாங்கள் ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம். இந்த சண்டையை நாங்கள் தொடர்வோம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். எங்கள் அரசு அமையும்போது நாங்கள் இந்த சட்டங்களை ரத்து செய்வோம்” என்று ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்களை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார். “இது நடக்க காங்கிரஸ் அனுமதிக்காது. நாங்கள் ஒரு அங்குலத்திற்கு பின்னால் செல்ல மாட்டோம், இந்த போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். எங்கள் அரசாங்கம் அமையும்போது நாங்கள் இந்த சட்டங்களை ரத்து செய்வோம்” என்று உறுதி கூறினார்.
இதனிடையே, மனோகர் லால் கட்டர் அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்யக் கோரி இரண்டு டஜன் உழவர் அமைப்புகள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து சிர்சாவில் உள்ள துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. கிளர்ந்தெழுந்த கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
இன்று காலை பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள சனூரில் தனது கடைசி பேரணியை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி, “எனக்கு பத்திரிகை சுதந்திரம் மற்றும் பிற முக்கிய நிறுவனங்களை கொடுங்கள். இந்த (நரேந்திர மோடி) அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது” என்றார். அனைத்து முக்கிய நிறுவனங்களையும் மோடி அரசு பலவந்தமாக கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மோடி அரசாங்கத்தால் இந்த மாநிலத்திற்கு கடும் அநீதி இழைக்கப்படுவதாக உணர்ந்ததால்தான் பஞ்சாபிற்கு வந்ததாக ராகுல் கூறினார். மேலும், அவர் இயல்பாகவே எப்போதும் பலவீனமானவர்களுடனும் துன்பப்படுபவர்களுடனும் நிற்பேன் என்றும் ஒருவேளை அதனால்தான் நான் அரசியலில் அடிபடுவேன் என்றும் அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.