Farmers Protest In Delhi : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்த போராட்டதை அமைதிபடுத்தும் நோக்கில் மத்திய அரசு மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் போராட்டம் மேலும் வலுபெற்ற நிலையில், போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல முடிவெடுத்த விவசாயிகள், குடியரசு தினத்தன்று (ஜன.26) டெல்லி செங்கோட்டையை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் இந்த பேரணியில் வெடித்த வன்முறையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கூட்டத்தை கலைக்க தூப்பாக்கி சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதில் ஒருவர் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து போராட்டம் கட்டுக்குள் வந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு அந்த பகுதி முழுவதும் இணைய வசதி தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தினால், இவ்வளவு நாள் அமைதியாக போராடி வந்த விவசாயிகளின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இந்நிலையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சனிக்கிழமை (பிப்வரி-6) நாடு தழுவிய "சக்கா ஜாம்" (சாலை மறியல்) போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மூன்று மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம், மதியம் முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் எனவும், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், திங்கள்கிழமை மாலை (நேற்று) அறிவிக்கப்பட்டது. போராட்ட களத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் இணைய தடை, விவசாயிகள் அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டது மற்றும் போராட்டம் நடைபெறும் இடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் நிறுத்தப்பட்டதற்கு எதிராக இந்த போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்த விவசாயிகள், இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த 26-ந் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணியில், வன்முறை வெடித்ததால் விவசாயிகள் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு போராட்டகாரர்கள் மீது பலர் ஊடகங்களில் கண்டனங்கள் தெரிவித்தனர். இதில் உத்தரபிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களில், உள்ளூர் வாசிகள் அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் டிராக்டர் பேரணியின் போது டெல்லி செங்கோட்டையில், சீக்கிய மதக் கொடியை ஏற்றியபோது, விவசாயிகள் அமைப்புகள் பேரணியை நிறுத்திவிட்டன. இதனால் நேற்று பாராளுமன்றத்தை முற்றுகையிட இருந்த திட்டத்தையும் கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக முகாமிட்டிருந்த காசிப்பூர்-மீரட் நெடுஞ்சாலையை காலி செய்யுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளர். இதனால் விவசாயிகள் பெரும் கலகத்தில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"