Farmer's Tractor Rally Tamil News : கடந்த ஒரு வாரமாகப் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும் விவசாயிகளை டெல்லியின் எல்லைகளுக்கு வெளியே அனுப்ப முடியாததால், டெல்லி காவல்துறை கடந்த சனிக்கிழமை இந்தியத் தலைநகருக்குள் குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால், அவர்கள் திட்டமிட்ட பாதையிலும், நிபந்தனையிலும் மாற்றங்களுடன் ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பின்னரே அவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் படி, கடந்த இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், மூன்று எல்லைகளிலிருந்தும் டெல்லிக்குள் நுழையலாம். ஆனால், எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் தங்கி மத்திய டெல்லியை நோக்கிச் செல்ல அனுமதியில்லை.
அணிவகுப்பில் பங்கேற்க, பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் டெல்லிக்கு செல்கின்றன எனப் பஞ்சாப் ஜம்ஹூரி கிசான் சபாவின் பொதுச் செயலாளர் குல்வந்த் சிங் சந்து கூறினார்.
"சுமார் 2.5-3 லட்சம் டிராக்டர்கள் போராட்ட இடங்களுக்கு அருகிலுள்ள சாலைகளில் செல்லும். இந்த அணிவகுப்பு எங்கள் பக்கத்திலிருந்து முற்றிலும் அமைதியானதாக இருக்கும்" என்றும் அவர் உறுதியளித்தார்.
“நாங்கள் இன்னும் பாதை மற்றும் இருப்பிடங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். ஜனவரி 26-ம் தேதி, வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் வரை அணிவகுத்து மீண்டும் எல்லைகளுக்குச் செல்லும்” என்று பாரதிய கிசான் மஞ்சின் பஞ்சாப் தலைவர் பூட்டா சிங் ஷாடிபூர் கூறினார்.
டெல்லி காவல்துறை விவசாயிகளுடன் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில் தங்கள் அணிவகுப்பை ரத்து செய்யும்படி அவர்களை சமாதானப்படுத்த முயன்றது. பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டிருந்தாலும் கூட, அணிவகுப்பைத் தலைநகருக்கு வெளியே வைத்திருக்கப் பரிந்துரைத்தது.
கடந்த சனிக்கிழமையன்று இது குறித்து சுமார் நான்கு மணி நேரம் நீடித்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் பின்னர் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவின் மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் வரும் ஜனவரி 26-ம் தேதி பேரணி குறித்த உடன்பாட்டை எட்டினர்.
"விவசாயிகள் தங்களுக்கு முன்மொழியப்பட்ட வழிகள், டிராக்டர்கள் மற்றும் அணிவகுப்பில் பங்கேற்கும் விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் நேரங்களைக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடன் நாளை வழியைப் பற்றி விவாதிப்போம். ஆனால், எதிர்ப்பு தெரிவிக்கும் எல்லைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே டிராக்டர் அணிவகுப்பு இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அணிவகுப்பின் போது அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆதாரங்களின்படி, சிங்கு தரப்பிலிருந்து அணிவகுப்பு சுமார் 100 கி.மீ தூரத்தில் இருக்கும்போது, டிராக்டர்கள் திக்ரி எல்லையைச் சுற்றி 125 கி.மீ வரை பயணிக்கும்.
குடியரசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, டெல்லி காவல்துறை நகரத்திலும் அதைச் சுற்றியும் ஐந்து அடுக்கு பாதுகாப்பை நிறுத்தியுள்ளது. சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லைகளில் 40,000-க்கும் மேற்பட்ட காவல்துறை, ஐ.டி.பி.பி மற்றும் சி.ஆர்.பி.எஃப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.