போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவாசாய சங்க பிரதிநிதிகள் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடங்க முடிவு செய்தன. டிசம்பர் 29-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று விவாசாய சங்க பிரதிநிகளின் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் எதிராக டெல்லியில் விவாசாய அமைப்புகளின் தொடர் போராட்டம் நான்காவது வாரமாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி முன்மொழியப்பட்டது.
எவ்வாறாயினும், பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட், "மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளும், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதமும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய பகுதியாக இருக்க வேண்டும்" என்றார். .
செப்டம்பர் மாதம் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கோரி, ஆயிரக்கணக்கான விவசாயிகள் சிகு, திக்ரி, காசிப்பூர் ஆகிய மூன்று மூன்று டெல்லி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு சுமூகதீர்வு காணும் வகையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்னதாக யோசனை தெரிவித்தது.
விவசாயிகளின் நலன் கருதியே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், மண்டி மற்றும் எம்.எஸ்.பி முறைகளை பலவீனப்படுத்துவதன் மூலம் பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.