பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானா காவல்துறை விவசாயிகள் மீது பெல்லட் துப்பாக்கி தாக்குதல் நடத்தியதில் 3 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாட்டியாலாவில் உள்ள கனாவுரைச் சேர்ந்த விவசாயி டேவிந்தர் சிங் பாங்கு ஷேகுபுரியா, 22 என்பவருக்கு கண்ணில் உள்ள துப்பாக்கி துகள்களை அகற்ற நேற்று (வியாழக்கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சண்டிகரில் உள்ள செக்டார் 32 இல் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஷேகுபுரியாவின் மருத்துவர்கள் நிலைமை மோசமானதை உறுதிப்படுத்தினர். அவர் தனது இடது கண் பார்வையை நிரந்தரமாக இழந்திருக்கலாம் என்று கூறினர்.
இதுபோன்று பெல்லட் துப்பாக்கி தாக்குதலில் குறைந்தது மூன்று விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர் என அமைச்சர் கூறினார். புதன்கிழமை, ஹரியானா காவல்துறை, டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி செல்வதைத் தடுக்கும் முயற்சியில் பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஷம்பு (பாட்டியாலா-அம்பாலா எல்லை) மற்றும் கானௌரி (சங்ரூர்-ஹிசார் எல்லை) ஆகிய இரண்டு இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
பஞ்சாப் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் கூறுகையில், “ 3 விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சண்டிகரில் உள்ள GMCH 32-ல் சிகிச்சையில் உள்ளார். இருவர் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அவர்களை சென்று பார்த்தோம். அவர்களின் கண்களை காப்பாற்ற முடியவில்லை. ஹரியானா காவல்துறை தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டுகளை மட்டுமல்ல, தோட்டாக்கள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளது என்றார். டாக்டர் மற்றும் அமைச்சரான பல்பீர் சிங் கண் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார். 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் பெல்லட் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
ஹரியானா ஏ.டி.ஜி.பி (சட்டம் மற்றும் ஒழுங்கு) மம்தா சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “கண்ணீர் புகைக்குண்டு தவிர, நாங்கள் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினோம், எங்கள் படைகள் 2,000-3,000 பேர் கொண்ட கும்பலால் சூழப்பட்டபோது அதை செய்தோம். ரப்பர் தோட்டாக்கள் உயிரிழப்பு ஏற்படுத்தாத வெடிமருந்துகளாகக் கருதப்படுகின்றன. அவர்கள் எங்களை நெருங்கி வந்து தாக்குதல் நடத்திய போது தான் நாங்கள் அவற்றைப் பயன்படுத்தினோம் என்றார்.
புதனன்று ஷேகுபுரியா உடன் இருந்த நண்பர் பர்மிந்தர் சிங் கூறுகையில், அவர்கள் Ghaggar ஆற்றங்கரையோரம் உள்ள வயல்வெளிகளில் நடந்து கொண்டிருந்தபோது, ஷேகுபுரியா அவர்கள் குழுவில் இருந்தவர்களை விட முன்னால் நடந்தார்.
“எல்லையை நோக்கி நடந்து கொண்டிருந்த வேறு சில விவசாயிகளுடன் அவரைப் பார்த்தோம். தடுப்பணைகளை உடைக்க விவசாயி தலைவர்களிடம் இருந்து உத்தரவு வரவில்லை; அவர்கள் வெறுமனே ஆர்வத்தால் முன்னால் சென்று கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, எதிர்ப்பாளர்களில் சிலர் அவரைத் தூக்கிச் சென்றனர் - அவர் இடது கண்ணில் இருந்து அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது, ”என்று பர்மிந்தர் கூறினார்.
"நாங்கள் அவரை பானூரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், அங்கு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டது. அங்கிருந்த மருத்துவர்கள் அவரை சண்டிகரில் உள்ள செக்டார் 32 மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இடது கண் பார்வை இழந்ததாக கூறினர் என்றார்.
ஷேகுபுரியா தனது பட்டப்படிப்புக்குப் பிறகு விவசாயத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் இப்போது பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ சமூகவியலில் படித்து வருகிறார் என்றார்.
40 கி.மீ தொலைவில், ராஜ்புராவில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜக்தார் சிங் கோட்டா ரோடா( 56) பதிண்டாவில் உள்ள ராம்பூர் பூலைச் சேர்ந்த விவசாயி, அவரது முதுகு, கை மற்றும் முதுகில் எலும்பு முறிவு மற்றும் பெல்லட் காயங்களிலிருந்து மீண்டு வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/chandigarh/at-least-3-farmers-lost-vision-due-to-pellet-injuries-punjab-health-minister-9164170/
ஜக்தார் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “நான் யாரையும் தூண்டவில்லை. ஹரியானா காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது, வாயு வெளியேறுவதைச் சரிபார்க்க நான் அவர்களில் சிலரை ஈரமான கன்னி பைகளால் மூட விரைந்தேன். திடீரென்று பின்னாலிருந்து ஏதோ ஒன்று என்னைத் தாக்கியது. வலி இருக்கிறது. எனக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
பார்தி கிசான் யூனியனின் (ஏக்தா-சித்துபூர்) செய்தித் தொடர்பாளர் குர்தீப் சிங் சாஹல் கூறுகையில், பல விவசாயிகளுக்கு பெல்லட் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து வருகிறோம். விரைவில் அவற்றை வெளியிடுவோம்'' என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.