இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காப்பாற்ற ஹனுமன் மந்திரங்களை சொல்லுங்கள் என, பாஜக தலைவர் கூறியிருப்பது நகைப்பை வரவழைப்பதாக உள்ளது.
மஹராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால்,விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். அதேபோல், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புயல் மையம் உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநில பாஜக தலைவரும், சேஹூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் சக்சேனா, இயற்கை பேரிடர்களிலிருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தினமும் ஒரு மணிநேரம் ஹனுமன் மந்திரங்களை சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
“எல்லா கிராமங்களிலும் ஹனுமன் மந்திரங்களை விவசாயிகள் சொன்னால், நாம் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்”, என அவர் கூறினார். மேலும், “அடுத்த 5 நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என்பதால், இளைஞர்கள் அந்நாடுகளில் ஹனுமன் மந்திரம் சொல்ல வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்”, என ரமேஷ் சக்சேனா தெரிவித்தார்.
இது மதம் சார்ந்த நம்பிக்கைதான் எனவும், ஒருவர் ஹனுமன் மந்திரங்கள் சொல்லுவதில் தவறேதும் இல்லை எனவும், அம்மாநில வேளாண் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா பத்திதார் கூறியுள்ளார்.