மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகனுடன் தொடர்புடைய வாகனங்கள், உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. பாரதிய கிசான் யூனியனின் கூற்றுப்படி, இந்த சம்பவத்தில் மூன்று விவசாயிகள் உயிர் இழந்துள்ளனர். மேலும், விவசாயிகளின் தலைவர் தஜிந்தர் சிங் விர்க் காயமடைந்தார் என்றும் பி.கே.யு கூறியது. இருப்பினும், அமைச்சர் மிஸ்ரா தனது மகனின் ஈடுபாட்டை மறுத்தார்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா (SKM) செய்தித் தொடர்பாளர் ஜக்தார் சிங் பஜ்வா கூறுகையில், “லக்கிம்பூர் கேரியின் திக்குனியா பகுதியில், விவசாயிகள் அமைதியாக போராட்டம் நடத்தினர். மத்திய இணை அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது தனது காரை மோதினார். இந்த சம்பவத்தில், பல விவசாயிகள் காயமடைந்தனர் மற்றும் சிலர் இறந்தனர் என்றார்.
மேலும், “இது இந்தியாவின் சர்வாதிகார அரசாங்கத்திற்கான சான்று. மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஜனநாயக உரிமை இல்லை, ”என்றும் அவர் கூறினார்.
எனினும், இந்த சம்பவத்தில் தனது மகனுக்கு தொடர்பு இல்லை என்று அமைச்சர் மிஸ்ரா கூறினார். லக்கிம்பூர் கேரி சம்பவ இடத்தில் என் மகன் இல்லை. என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. பாஜக தொண்டர்கள் கார் மீது கற்கள் வீசப்பட்டன, இதனால் கார் கவிழ்ந்தது. இரண்டு பேர் காரின் கீழ் மாட்டிக்கொண்டதால் இறந்தனர். அதன் பிறகு பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டனர் ”என்று அவர் பிடிஐ மூலம் தெரிவித்தார்.
பி.கே.யு தலைவர் ராகேஷ் திகைத், காசிப்பூரில் இருந்து லக்கிம்பூர் கேரிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்கள் கார்களால் தாக்கப்பட்டனர். விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தகவல்களின்படி இதுவரை பலர் இறந்துள்ளனர். நான் இங்கிருந்து லக்கிம்பூர் கேரிக்குச் செல்கிறேன், அதன்பின் உங்களுக்கு தகவல்களைத் தருகிறேன். நான் நள்ளிரவில் அங்குள்ள விவசாயிகளிடம் சென்று சேர்வேன், ”என்றார்.
அரசியல்வாதியின் மகனும் விவசாயிகளில் ஒருவரை சுட்டுக் கொன்றதாக SKM மேலும் குற்றம் சாட்டியுள்ளது. அதன் செய்திக்குறிப்பில், விவசாயிகள் பாஜக தலைவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கி பதிலடி கொடுத்தனர். அமைச்சர் மற்றும் அவரது மகன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க விவசாயிகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் தலைவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்ததற்காக உத்தரப்பிரதேச துணை முதல்வர் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்த விவசாயிகள் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் திரண்டனர். மகாராஜா அக்ரஸேன் மைதானத்தில் துணை முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்குவதை விவசாயிகள் தடுத்தபோது இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் இந்தியில் ட்வீட் செய்துள்ளார், “லக்கிம்பூர் கேரியில் நடந்தது கண்டிக்கத்தக்கது. நிர்வாகம் குற்றவாளிகளுக்கு எதிராக செயல்படும் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் போராட்டக்காரர்கள் மீது இரண்டு SUV கள் ஓடியதாகக் கூறி, திங்களன்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் டிவிஷனல் கமிஷனர்கள் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்திற்கு SKM அழைப்பு விடுத்துள்ளது என்று விவசாயத் தலைவர்கள் யோகேந்திர யாதவ் மற்றும் தர்ஷன் பால் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
“மத்திய உள்துறை இணை அமைச்சரும் மற்றும் கேரி தொகுதி எம்.பி.யுமான அஜய் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அமைச்சரின் மகன் மற்றும் பிற குண்டர்கள் மீது ஐபிசி பிரிவு 302 (கொலைக்கான தண்டனை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், ”என்று சிங் மற்றும் யாதவ் ஒரு மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
“ஞாயிற்றுக்கிழமை சம்பவத்திற்கு எதிராக எங்களது போராட்டத்தை வெளிப்படுத்த, SKM காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாடு முழுவதும் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் டிவிஷனல் கமிஷனர்கள் அலுவலகங்களுக்கு வெளியே ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது” என்று சிங் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கன்னையா குமார், பாஜக அரசின் திமிரை விவசாயிகள் மிதிப்பார்கள் என்று கூறினார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் திங்களன்று லக்கிம்பூர் கேரிக்கு செல்வதாக கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். அவர் டுவிட்டரில், “லக்கிம்பூர் கேரியில் நடந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். எங்கள் விவசாய சகோதரர்கள் மீது பாஜகவின் அக்கறையின்மை என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அடங்கிய குழு நாளை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க உள்ளது. நமது விவசாயிகளுக்கு எங்கள் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதும் இருக்கும். என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil