வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் தரவில்லை என்று குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு தீர்வை உருவாக்க ஒரு குழுவை அமைக்கலாம் என்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களால், ஆயிரக்கணக்கான விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து, தலைநகரின் நுழைவாயிலில் கூடிவருகின்றனர்.
டெல்லி எல்லைகளுக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை அகற்றக் கோரிய பல்வேறு தொகுதி மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் அடங்கிய அமர்வு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வியாழக்கிழமைக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்னைகளைத் தீர்க்க முன்மொழியப்படும் குழுவில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
“போராடும் விவசாயிகளுடனான உங்கள் பேச்சுவார்த்தைகள் இப்போது வரை செயல்படவில்லை. போராடுகிற விவசாய சங்கங்கள் இந்த வழக்கில் ஒரு கட்சியாக மாற்றப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதுவரை, அரசாங்கமும் விவசாயிகள் சங்கத் தலைவர்களும் பெரிய முன்னேற்றம் இல்லாமல் 5 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இதனிடையே, விவசாயிகளின் நலனுக்கு எதிராக அரசாங்கம் எதுவும் செய்யாது என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்ற அமர்வில் தெரிவித்தார்.
ரிஷப் சர்மா என்ற சட்டம் படிக்கும் மாணவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “டெல்லி எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்துவதால், சாலைகள் போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டுள்ளன. எல்லையின் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவை வாகன போக்குவரத்தையும் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற அரசு / தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை பெற டெல்லியில் இருந்து வெளியேயும், வெளியே இருந்து டெல்லிக்கும் பயணிக்கும் மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த மனுவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய தலைநகரில் தேவைப்படும் அனைத்து அவசர / மருத்துவ சேவைகளுக்கான சாலைகளை போராட்டக்காரர்கள் தடுப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அகற்றுவதற்கு வழிவகுக்கும் என்று விவசாயிகள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அவை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன. ஆனால், இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளைத் தரும் என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.
விவசாயிகள் சங்கங்கள் புதன்கிழமை அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமான பதிலை அனுப்பி டிசம்பர் 9ம் தேதி திட்டத்தை நிராகரித்து. அதில் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கப்பட்டிருந்தது. விவசாயிகள் சங்கங்களிடம் இருந்து அரசாங்கம் எழுத்துப்பூர்வமான பதிலை பெற்றதாக வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினார். இருப்பினும், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் அழைப்பை அனுப்புமா என்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil