லக்கிம்பூர் கெரி வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவை பதவி நீக்கம் செய்து உடனடியாக கைது செய்யகோரி விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், " விவசாயிகள் போராட்டம் காரணமாக, காலை முதல் 50 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் பிரிவு மற்றும் ஹரியானாவில் உள்ள அம்பாலா பிரிவில் தான் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கத்ராவுக்கு செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக பஞ்சாபில் இரண்டு மாதங்கள் ரயில்வே சேவை முடங்கபட்டபோது பெரிய அளவில் நிலைமை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலைமையை விட தற்போதைய நிலை மோசமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 24, 2020 அன்று பஞ்சாபில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. நவம்பர் 6க்குள், சுமார் 2,200 சரக்கு ரயில்கள் மற்றும் 1,300 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ரயில்வேக்கு சுமார் 1,300 கோடி இழப்பு ஏற்பட்டது என கூறப்படுகிறது.
ஹரியானாவில் உள்ள அம்பாலா கன்டோன்மென்ட் சந்திப்பு பஞ்சாப் மாநிலத்தின் நுழைவு பகுதியாக உள்ளது. அங்கிருந்து தான், லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் வரையிலான பிராட்-கேஜ் பகுதிகளுக்கு செல்லக்கூடிய வழித்தடங்கள் உள்ளன.
முன்னதாக, சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், " லக்கிம்பூர் கெரி வழக்கில் நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். 'ரயில் ரோக்கோ' போராட்டத்தின் படி, இன்று (அக்டோபர் 18) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து ரயில் போக்குவரத்தும் ஆறு மணி நேரம் நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil