தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது குறித்தும், தனது கைது குறித்தும் செய்தியாளர்களிடம் முதன் முதலாக பேசினார். அதன் விவரம் இதோ,
நேற்று, போலீசார் உங்களை சந்திக்க மீடியாவை அனுமதிக்கவில்லை, இதுகுறித்த உங்கள் முதல் வினையாற்றல் என்ன?
நீங்க பார்த்திருப்பீர்கள், நான் என் வீட்டில் கைது செய்யப்பட்டேன். இந்தியாவின் உள்துறை அமைச்சர் அவர்கள் பரூக் அப்துல்லா கைது செய்யப்படவேயில்லை என்று பொய் சொல்லியிருப்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அதுவும், நான் விருப்பத்தோடு என் வீட்டில் தங்கி இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். அது உண்மையேயில்லை. நீங்களும் அதை பார்த்திருப்பீர்கள். என் வீட்டிற்குள் யாரும் வர அவர்கள் அனுமதிக்கவில்லை. எனது பாதுகாவலர்களை எத்தனை பேர் டிஸ்மிஸ் செய்யப்படப் போகிறார்கள் என்று கூட தெரியவில்லை. ஏனெனில், நான் கைது செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் சொன்ன போது, நீங்கள் யார் என்னை கைது செய்வதற்கு? என்று கேட்டேன். இப்போது உங்கள்(மீடியா) முன் பேச வந்திருக்கிறேன். நாங்கள் உள்ளே என்ன அனுபவித்தோம் தெரியுமா... நாட்டிற்காக 70 ஆண்டுகாலம் உழைத்தோம். இன்று, குற்றவாளிகள் போல் ஆக்கப்பட்டிருக்கிறோம். 370 சட்டப்பிரிவு, 35A ஆகியவை மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் என இந்திய அரசு தான் அனுமதி அளித்தது. வாக்குறுதியும் கொடுத்தது.
நீங்கள் மூன்று முறை முதல்வராக பதவி வகித்துள்ளீர்கள், ஸ்ரீநகர் எம்.பியாகவும் உள்ளீர்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக தரம் குறைக்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து என்ன? சிறப்பு அந்தஸ்து.... அரசியலமைப்பு... எல்லாவற்றையும் பற்றி...
உங்கள் உடல் செதுக்கப்பட்டால் நீங்கள் எப்படி உணருவீர்களோ அப்படி உணருகிறேன். உடல் அனைத்து தீய விஷயங்களையும் ஒருங்கிணைந்து எதிர்க்கும், அனைத்து தீமைகளின் போதும் பக்கபலமாக நிற்கும். இன்று இந்த தேசத்திற்காக பக்கபலமாக நின்றவர்களுக்கு எவ்வாறு துரோகம் இழைக்கப்பட்டது, எவ்வாறு எங்கள் மாநிலம் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்கள் ஆக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அவர்களால் மக்களின் இதயங்களையும் பிரிக்க முடியுமா?. அவர்கள் ஹிந்துக்களை ஒரு பக்கமும், முஸ்லிம்களை ஒரு பக்கமும், புத்திஸ்ட்களை ஒரு பக்கமும் பிரிக்கப் போகிறார்கள் என நான் நினைக்கிறேன். இது தானே அவர்களுக்கு வேண்டும்? இப்படி தானே இந்தியா இருக்க வேண்டும்? என் இந்தியா எல்லோருக்குமானதாக, மதச்சார்பற்ற ஒற்றுமையான தேசத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமான நாடாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
உங்கள் எதிர்கால அரசியல் என்ன உங்கள் தந்தையின் அரசியல் என்ன?
எங்களது அரசியல் தொடர்ந்து போராடுவதே, நாங்கள் ஜனநாயகத்திற்காக போராடுவோம். நாங்கள் ஒற்றுமைக்காக போராடுவோம். ஏனெனில், ஒற்றுமையே பலத்தை தரும். மதச்சார்பற்ற இந்தியாவை விரும்புபவர்களையும், ஜனநாயக இந்தியாவை விரும்புபவர்களையும் நான் அழைக்கிறேன். எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல, சாதாரண மக்களால் அது கொடுக்கப்படவில்லை. இந்திய அரசாங்கத்தால் அது கொடுக்கப்பட்டது. நேரு போன்ற தலைவர்களால்...
நீங்கள் நீதிமன்றத்துக்கு செல்வீர்களா, போராடுவீர்களா?
மீண்டும் அனைவரும் உட்கார்ந்து இதுகுறித்து முடிவெடுப்போம். நாங்கள் கொடுக்க மாட்டோம். ,மரணம் என்பது கடவுளின் விருப்பம். ஆகையால் ஏன் கவலைப்பட வேண்டும்? எனது கவலையெல்லாம், சாதாரண மனிதர் இனி என்னவாகப் போகிறார் என்பதை பற்றியே. அவன் வீட்டில் மருந்துகள் இல்லாமல் இருக்கலாம். உணவே இல்லாமல் கூட இருக்கலாம். இப்படியிருக்க, மூன்று மாதத்துக்கு தேவையான பால் இருக்கிறது, ரேஷன் இருக்கிறது, சர்க்கரை இருக்கிறது, கோதுமை இருக்கிறது என அரசாங்கம் கூறுவதில் என்ன பயன் இருக்கிறது? இவற்றை வாங்க பணமே இல்லாத போது, இவை இருந்து என்ன பயன்?
எனது உடல்நிலையால், நான் இறந்து போகலாம். ஆனால், நான் என் மாநில மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். கடுமையான மற்றும் சாதாரண தருணங்களின் போதும் நாங்கள் உங்களுடன் இருந்தோம். அதே, கடுமையான மற்றும் சாதாரண தருணங்களின் போதும் நீங்கள் எங்களுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன், நாட்டில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் .. நாட்டில் மதச்சார்பின்மை திரும்ப வேண்டும்.
ஒமர் அப்துல்லாவை சந்தித்தீர்களா?
நேற்று இரவு சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு நான் அவரை சந்தித்தேன்.