/tamil-ie/media/media_files/uploads/2018/01/supreme-court-759.jpg)
Tamil nadu latest news
கடந்த சில வருடங்களாக பசு பாதுகாப்பு என்று சொல்லி மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் மீதும், கடந்த சில மாதங்களாக வாட்ஸ்ஆப் வதந்திகளை நம்பி புதிதாக ஊருக்குள் நுழையும் மனிதர்கள் மீதும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனை தடுப்பதற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பெரும் முயற்சிகள் செய்து வருகிறது. இதனை தடுப்பதற்காக சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைமைக் காவல் அதிகாரியினை நியமித்து, இது தொடர்பான பிரச்சனைகள் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள், வன்முறைகளை தூண்டிவிடும் வகையில் பேசுபவர்கள் போன்றவர்களைக் கண்டறிய சிறப்பு அதிகாரிகளை அந்த தலைமைக் காவலர் நியமிப்பார். மாதத்திற்கு ஒரு முறை புலனாய்வு அமைப்புகளில் இருந்து வரும் தகவல்கள் தொடர்பாக மாநில காவல் துறையினருடன் ஒரு கூட்டத்தினையும் அவர் நடத்த வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து சட்ட ஒழுங்கினை பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
இது போன்ற குற்றங்களில் ஈடுபவர்கள் மீது ஐபிசி 153ன் கீழ் முதல் தகவல் அறிக்கை சமர்பித்து வழக்கு பதிய வேண்டும். நிலுவையில் இது தொடர்பாக இருக்கும் வழக்குகளையும், புதியதாக பதியப்படும் வழக்குகளையும் ஆறு மாத காலத்திற்குள் விசாரித்து தீர்ப்பினை கூற வேண்டும்.
இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் இறந்து போனவர்களின் உறவினர்களுக்கும் ஒரு மாத காலத்திற்குள் நிவாரண நிதியினை வழங்க புதிதாக திட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் மாநில அரசிடம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.