உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு நிலையான வைப்பு மற்றும் வங்கிக் கணக்குகளில் ரூ.55.75 லட்சமும், பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.பி.எஃப்.) ரூ.1.06 கோடியும், மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் நீதிபதி பி.ஆர்.கவாய் வங்கிக் கணக்குகளில் ரூ.19.63 லட்சமும், பி.பி.எஃப். கணக்கில் ரூ.6.59 லட்சமும் வைத்துள்ளார். திங்கள்கிழமை இரவு உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட சொத்துகளின் பட்டியலில் தெரியவந்துள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் வகையில் நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்சநீதிமன்றம் 2025, ஏப்.1 அன்று முடிவுசெய்தது. அதன்படி ஏற்கெனவே சில நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பெறப்பட்டு அவை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிற நீதிபதிகளிடம் இருந்தும் சொத்து விவரங்கள் பெறப்பட்டு விரைவில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், 2022, நவ.9 முதல் 2025, மே 5 வரை உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் ஒப்புதல்கள், நீதிபதிகளின் பெயா், நியமன தேதி, சிறப்பு பிரிவு (எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி) உள்ளிட்ட தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court makes its judges’ assets public
33 நீதிபதிகளில் 21 நீதிபதிகளின் சொத்துக்கள் திங்கள்கிழமை இரவு உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட விவரங்கள், தனிப்பட்ட உடைமைகளின் விவரங்களைத் தவிர, மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களின் விவரங்களும் அடங்கும்.
மே 24-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நீதிபதி ஏ.எஸ்.ஓகா தனது சொத்துக்களில் பி.பி.எஃ.ப் ரூ.92.35 லட்சம், எஃப்.டி.யில் ரூ.21.76 லட்சம், 2022 மாடல் மாருதி பலேனோ கார் மற்றும் ரூ.5.1 லட்சம் கார் கடன் வைத்துள்ளார்.
நீதிபதி விக்ரம் நாத் நொய்டாவில் 2 பி.எச்.கே அடுக்குமாடி குடியிருப்பு, அலகாபாத்தில் ஒரு பங்களா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விவசாய நிலத்தை பரம்பரை நிலமாக அறிவித்தார். ரூ.1.5 கோடி முதலீடும் செய்துள்ளார்.
நீதிபதி சூர்ய காந்த், சண்டிகர், குருகிராம் மற்றும் டெல்லியில் தனது மனைவியுடன் கூட்டாக குடியிருப்பு சொத்துக்களை வைத்திருக்கிறார். அவரது முதலீடுகளில் வட்டி உட்பட 31 எஃப்.டி ரசீதுகள் மொத்தம் ரூ.6.03 கோடி அடங்கும்.
நீதிபதி பேலா எம்.திரிவேதிக்கு அகமதாபாத் குல்பாய் டெக்ராவில் உள்ள தீப்தி பாங்க் ஆப் இந்தியா சொசைட்டியில் ஒரு வீடு உள்ளது. மேலும் அகமதாபாத்தில் உள்ள நீதிபாக் நீதிபதிகள் கூட்டுறவு சங்கத்தில் ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.60 லட்சம், பி.பி.எஃப். ரூ.20 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் 2015 மாருதி ஸ்விப்ட் கார் ஆகியவை உள்ளன.
நீதிபதி சுதான்ஷு துலியாவிடம் 2008 மாருதி ஜென் எஸ்டிலோ கார் உள்ளது. அவரது சொத்து பட்டியலில், இங்கு குறிப்பிடப்பட்டு உள்ள அனைத்து அசையா சொத்துக்களும் நான் நீதிபதியாக ஆவதற்கு முன்பு இருந்தவை. அதற்கு மேல் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி சஞ்சய் குமார் ஒரு விரிவான பங்கு போர்ட்ஃபோலியோவை வைத்திருக்கிறார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பார்தி ஏர்டெல் லிமிடெட், சோழமண்டலம் ஃபைனான்ஸ் லிமிடெட், ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் லிமிடெட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐடிசி லிமிடெட், என்எம்டிசி லிமிடெட், ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், சோலாரா ஆக்டிவ் பார்மா சயின்சஸ் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட், டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட், டாடா ஸ்டீல், வேதாந்தா லிமிடெட், ஜியோ ஃபைனான்ஸ் லிமிடெட், விஜயா டயக்னாஸ்டிக் சென்டர் லிமிடெட், ஐடிசி ஹோட்டல்கள் மற்றும் என்எம்டிசி ஸ்டீல் லிமிடெட்.
மே 2023-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வரை வழக்கறிஞராக இருந்த நீதிபதி கே.வி.விஸ்வநாதன், 2010-11 முதல் 2024-25 வரை மொத்தம் ரூ .120.96 கோடி முதலீடு செய்து ரூ .91.47 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்.