Shaju Philip
தன்னுடைய ஆண் மகனை பிரசவித்து 13 மாதங்கள் கழித்த பின்பு அனுபமா புதன்கிழமை அன்று குடும்பநல நீதிமன்றத்தில் இருந்து தன்னுடைய குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அனுபமாவின் துணையும் முன்னாள் சி.பி.எம். மாணவரணி எஸ்.எஃப்.ஐ-யின் தலைவருமான அஜித் குமாரின் விருப்பத்திற்கு மாறாக தத்துக் கொடுத்த குழந்தையை நீதிமன்றம் குழந்தையின் தாயாரிடம் ஒப்படைத்தது.
பெற்றோர்கள், காவல்துறை மற்றும் ஆளும் சி.பி.எம். கட்சியின் பல்வேறு தடைகளை கடந்து குழந்தைக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ. சோதனையில் அக்குழந்தை அனுபமா மற்றும் அஜித்தின் குழந்தை என்பது உறுதியான நிலையில் 23 வயது தாயாரின் நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்தது.
சி.பி.எம். தலைவர்களாக இருந்த அனுபமாவின் பெற்றோர்கள், அனுபமாவின் அனுமதியை பெறாமல் குழந்தையை தத்து கொடுத்துக் கொடுத்துள்ளனர். அஜித் குமாருடனான உறவுக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அனுபமா கர்ப்பம் தரித்த காலத்தில் அஜித் மற்றொரு பெண்ணுடன் திருமண உறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்த ஆண் குழந்தையின் டி.என்.ஏ. அனுபமா மற்றும் அஜித்தின் டி.என்.ஏ.வுடன் ஒத்துப் போகிறது. அவர்கள் தான் உண்மையான பெற்றோர்கள் என்று குழந்தைகள் நல கமிட்டி குடும்பநல நீதிமன்றத்தில் புதன் கிழமை அறிவித்தது. நீதிமன்றத்தில் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு சென்ற இந்த இணையர் பிறகு அஜித்தின் வீட்டிற்கு சென்றனர். அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
பிறந்த மூன்றே நாளில் அவனை என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். தற்போது, என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலவில்லை. நீதிக்கான என்னுடைய இந்த போராட்டத்தில் என்னுடன் இருந்த அனைவருக்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்ணீருடன் கூறினார் அனுபமா.
மிகவும் வசதியான குடும்ப பின்னணி இல்லை. மிகவும் வசதியான வாழ்க்கையை எங்களால் வழங்க இயலாது. ஆனால் நிச்சயமாக சிறந்த மனிதாக வளர்த்தெடுப்பேன் என்று அவர் கூறினார்.
எங்களின் குழந்தையை மூன்று மாதங்களாக பார்த்துக் கொண்ட ஆந்திரா தம்பதியினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
ஆந்திர தம்பதியிடம் இருந்து குழந்தையை எடுக்கச் சென்ற அதிகாரிகளில் ஒருவர், அந்த தம்பதியினர் பரிதவித்ததாக கூறினார். கேரள அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் அழத்துவங்கி விட்டனர். தங்களின் வாழ்க்கையை பூர்த்தி அடைய செய்தது இந்த குழந்தை என்று கூறிய அவர்கள், அவனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க மற்றொரு நகரத்திற்கு மாறினோம் என்று அவர்கள் கூறியதாக கூறினார். அந்த குழந்தையுடன் அவனுக்கான பொம்மைகள், ஆடைகள், மருத்துவ சான்றுகள், படுக்கை என அனைத்தையும் உடன் வைத்து கொடுத்த அந்த பெண் மனம் உடைந்துவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அனுபமா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த பிறகு தன்னுடைய சோதனை காலம் ஆரம்பமாகியது என்று கூறுகிறார் அனுபமா. என்னுடைய குழந்தை சட்ட விரோதமானது. அவனை என்னால் வளர்க்க முடியாது என்று என்னுடைய பெற்றோர்கள் கூறினார்கள். இரண்டு முறை என்னுடைய கர்ப்பதை கலைக்கவும் முயற்சி மேற்கொண்டனர். அதற்காக மலப்புரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். சமயத்தில், என்னுடைய குழந்தை வெறும் சதைப் பிண்டம் தான் என்று கூட கூறினார்கள். அவனுக்கு உடல்சார்ந்த பிரச்சனை இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக எனக்கு சுகப்பிரசவம் மறுக்கப்பட்டது என்று அனுபமா கூறியுள்ளார்.
கர்ப்பமாக இருந்த போது இரண்டு முறை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார் அனுபமா. அஜித்தை பார்க்கவிடாமல் வெகு காலத்திற்கு அறைக்குள் அனுபமா பூட்டி வைக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி அன்று அனுபமா குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக குழந்தை பிரிக்கப்பட்டது. அனுபமாவின் மூத்த சகோதரிக்கு திருமணம் ஆனவுடன் நிச்சயமாக குழந்தையை கொடுத்துவிடுவோம் என்று அனுபமாவின் பெற்றோர்கள் அவரிடம் சத்தியம் செய்துள்ளனர். ஆனால் அது நடக்கவே இல்லை. அதன் பின்னர் அனுபமா எஸ்.எஃப்.ஐ-யில் இருந்தும், அஜித் டி.ஒய்.எஃப்.ஐ-யில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
அனுபமா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி அன்று இது தொடர்பாக புகார் அளித்த போதும் ஆகஸ்ட் 7ம் தேதி அன்று குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. குழந்தைகள் மேம்பாட்டு கமிட்டியை அனுபமா அணுகி மூன்றே நாட்களில் இது அரங்கேறியது.
கடந்த மாதம் தன்னுடைய புகார்களை பொதுவெளியில் எடுத்துச் சென்ற பிறகு கேரள நிர்வாகம் இதில் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நவம்பர் 11ம் தேதியில் இருந்து அனுபமா மற்றும் அஜித் கேரளாவின் குழந்தைகள் நல கவுன்சில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 18 அன்று, CWC குழந்தையை கேரளாவிற்கு கொண்டு வர KSCCW-க்கு உத்தரவிட்டது. KSCCW அதிகாரிகள் தலைமையிலான குழு நவம்பர் 20 அன்று தத்தெடுக்கப்பட்ட பெற்றோரிடமிருந்து குழந்தையைப் பெற்று மாநிலத்திற்கு கொண்டு வந்தது.
வெகு நாட்களுக்கு முன்பே தன்னுடைய மகனுக்கு பெயரை உறுதி செய்துவிட்டதாக கூறிய அஜித் அவனுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாங்கள் வாங்கி விட்டோம் என்றும் கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.