Nirmala Sitharaman Press Conference Latest Updates: பிரதமர் மோடி, சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் வகுக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுகுறித்த பொருளாதார திட்டங்களை 4 கட்டமாக அறிவித்து வருகிறார். இதில் அவர் கடைசியாக குறிப்பிட்டுள்ள 2 அறிவிப்புகள் வெறும் பூஜ்ஜியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து, இன்று 4வது நாளாக, சுய சார்பு இந்தியா பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.
முதல் நாள் அறிவிப்பு: நிர்மலா சீதாராமன் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார்.
இரண்டாவது நாள் அறிவிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், தெருவோர வியாபாரிகளுக்கான பொருளாதார திட்டங்களை அறிவித்தார்.
மூன்றாவது நாள் அறிவிப்பு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 3-ம் நாள் அறிவிப்பில், ரூ.1 லட்சம் கோடியில் வேளாண்மை உள் கட்டமைப்பு நிதி உருவாக்குவது; ரூ.10,000 கோடியில் குறு உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அமைப்பது; மூலிகைப் பயிர்களை பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ.4,000 கோடி; மீனவர்கள் மற்றும் மீன்வளம் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.20,000 கோடி; கால்நடை வளர்ப்புக்கு ரூ.15,000 கோடி; தேனி வளர்ப்பு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.500 கோடி உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
இதனைத் தொடந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சுயசார்பு இந்தியாவுக்கான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்து வருகிறார்.
Live Blog
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.20 லட்சம் நிதி உதவி குறித்து கடந்த 4 நாட்களாக தெரிவித்து வருகிறார். நேற்று விவசாயம் இன்று, மின்சாரம், அணுசக்தி துறை, விமான துறை, நிலக்கரி சுரங்கங்கள் குறித்து அறிவித்தார். இராணுவ தளவாடங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளார். அனைத்து துறைகளையும் தனியார் மயமாக்க முயற்சிக்கிறார்கள். அரசு ரகசியமாக வைக்கவேண்டியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு அழகல்ல. சிறு குறு தொழிற்சாலைகளுக்கு திட்டங்கள் யாரும் மூலம் செயல்படுத்துவார்கள் என்று தெரியவில்லை என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் குறித்து, “ஏழைக் குடும்பங்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாள் கூலி தொழிலாளர்கள், சுய வேலை செய்பவர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கீழ்த்தட்டில் உள்ள நடுத்தர மக்கள் ஆகியோருக்கு எந்தப் பயனும் இல்லாத நிதியமைச்சரின் அறிவிப்புகளை நான்கு நாட்களாகக் கேட்டோம். மேற்குறிப்பிட்டவர்களுக்கு நிதியமைச்சரின் முதல் தவணை அறிவிப்பில் எதுவுமில்லை. இரண்டாவது தவணை அறிவிப்பில் புலம் பெயர்ந்து திரும்பியவர்களுக்குத் தலா 10 கிலோ தானியத்திற்கு ரூ 3500 கோடி மட்டுமே. மூன்றாவது, நான்காவது தவணை அறிவிப்புகளில் பூஜ்யம்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மோசமானதில்லை என்றாலும் மக்களின் கைகளில் நேரடியாகப் பணத்தை வழங்குவது பற்றி யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி அளிக்கப்படும். உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். செயற்கைக் கோள் தயாரிப்பு & அவற்றை ஏவுவது போன்றவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரோ உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: மருத்துவமனைகள் அமைப்பதற்கான மானியம் 30% வரை அதிகரிக்கப்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மருத்துவ துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்கள் உருவாக்குவதற்கு தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: விமானங்கள் பராமரிப்பு பழுது பார்க்கும் மையமாக இந்தியா உருவாகும். விமான பழுது மற்றும் பராமரிப்பு துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 2000 கோடி புழங்கும். இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதால் 13 ஆயிரம் கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும். மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும். விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் தனியார் பங்களிப்பை அனுமதிப்பதால் ரூ.13,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: சில ராணுவ தளவாடங்கள் உள்நாட்டில் மட்டுமே உற்பத்தி செய்யும் வகையில் இறக்குமதி தடை செய்யப்படும். பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ஆயுத தொழிற்சாலை வாரியம் கார்ப்பரேட் மயமாக்கபடும் என்று அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: சீர்திருத்தங்கள் மூலமாக விமானங்களை இயக்குவதற்கான செலவை ரூ. 1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி மசோதா விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இந்திய வான் எல்லையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட உள்ளது என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். முதல் கட்டமாக 50 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: 500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையான முறையில் ஏலம் விடப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பாக்சைட் & நிலக்கரிச் சுரங்கங்கள் ஒன்றாக ஏலம் விடப்படும். கனிம வளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தும் வகையில் 'மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: சுரங்கத்துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். கனிமச் சுரங்கங்களின் குத்தகையை பிற நிறுவனங்களுக்கு மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும். நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி தன்னிறைவு பெறுவதே நமது இலக்கு என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீத்தேன் வாயு திட்டங்களிலும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: ஜிஎஸ்டி, நேரடி மானியம் ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா விளங்கி வருகிறது என்று கூறினார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: வணிக ரீதியாக நிலக்கரி எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. முதற்கட்டமாக சுரங்கங்களில் இருந்து நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கு போக்குவரத்துக் கட்டமைப்பு செய்வதற்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய 8 துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்: தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக 5 லட்சம் ஹெக்டர் நிலம் கை இருப்பில் உள்ளது. கனிமங்கள், கனிமங்கள், தளவாட உற்பத்தி, பாதுகாப்பு, விமானம் ஆகிய துறைகளுக்கான அறிவிபுகள் இன்று வெளியாகின்றன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை ஆகும். நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை. நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்று கூறினார்.
சுய சார்பு திட்டங்களை அறிவித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்: சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல. சுயசார்பு பாரதத்தை உருவாக்க கடுமையான போட்டிகளை சமாளிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights