ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், அரசுத் துறைகளுக்கும், நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இனிமேல் அரசு துறைகள் ஏர் இந்தியாவிடமிருந்து டிக்கெட்டுகளை பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது, ஏர் இந்தியா டாடா குரூப் கைவசம் உள்ளதால், மேலும் கடன் தொகையை நீட்டிக்க வேண்டாம் என அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " ஏர் இந்தியாவின் (AIR INDIA) நிலுவைத் தொகையை அனைத்து அமைச்சகங்களும், அரசுத் துறையும் உடனடியாக செலுத்த வேண்டும், அதே போல மறு உத்தரவு வரும் வரை விமான நிறுவனத்திடமிருந்து வாங்கும் அனைத்து பயணசீட்டுகளும் பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும். இந்த அறிவுறுத்தலை சக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009இல் வெளியான உத்தரவின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் LTC உட்பட அனைத்து விமானப் பயணங்களுக்கும் (உள்நாட்டு மற்றும் சர்வதேச) விமான டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில், ஏர் இந்தியாவிடமிருந்து மட்டுமே டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
ஆனால், விவிஐபி பயணம், வெளியேற்றுதல் நடவடிக்கைகள் மற்றும் பிற அலுவல் பயணங்கள் ஆகியவை தொடர்பாக அரசிடமிருந்து மிகப்பெரிய நிலுவைத் தொகை வர வேண்டும் என ஏர் இந்தியா அதிகாரிகள் கூறுகின்றனர்.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் ரூ.18000 கோடிக்கு ஏல விற்பனையில் வாங்கியுள்ளது. தற்போது விமான நிறுவனத்தை ஒப்படைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. நிறுவன பரிமாற்றம் செயல்முறை டிசம்பர் 2021க்குள் முழுமையாக முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil