இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறி இரு மதத்தினருக்கிடையே வன்முறை மற்றும் மதக்கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக 23 முஸ்லீம் இளைஞர்கள் மீது உத்தரபிரேதச போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சர்காரி போலிஸ் ஸ்டேசனிற்கு உட்பட்ட சலாட் கிராமத்தில் உர்ஸ் திருவிழா, ஆண்டுதோறும் அங்குள்ள மசூதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தாண்டும் கடந்த மாதம் 31ம் தேதி உர்ஸ் திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது எருமை மாட்டுக்கறியின் இறைச்சியை சாதத்துடன் கலந்து அதை அங்குள்ள இந்துக்களுக்கு வழங்கினர். இதனால், அங்கு மதக்கலவரம் மற்றும் வன்முறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக இந்த புகார் வாபஸ் பெறப்பட்டதால் நிலைமையை எல்லைமீறிப்போகாமல், போலீஸ் பார்த்துக்கொண்டனர்.
இந்த தகவல், அந்த பகுதி பா.ஜ. எம்.எல்ஏ பிரிஜ்பூஷன் ராஜ்புட் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து இந்துக்களுக்கு அசைவ பிரியாணி வழங்கி மதக்கலவரம் ஏற்பட காரணமாக இருந்ததாக முஸ்லீம் இளைஞர்கள் 23 பேர் மீது போலீசார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதன்காரணமாக, அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவிவருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.