குஜராத்தின் பருச் மாவட்டத்தில் காக்கரியா கிராமத்தில் வசிக்கும் 37 குடும்பங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பழங்குடியினரை இஸ்லாமியத்திற்கு மாற்றியதற்காக, தற்போது லண்டனில் வசிக்கும் உள்ளூர் நபர் உட்பட 9 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பழங்குடியினர் வசவா இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பருச் காவல் துறை அதிகாரி கூறுகையில், " குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர்கள், பழங்குடியினரின் பின்தங்கிய பொருளாதார நிலை, கல்வியறிவின்மை ஆகியவற்றை பயன்படுத்தி, இஸ்லாமியத்திற்கு மாற்றியுள்ளனர்" என்றார்.
இதுதொடர்பாக மதம் மாறிய நபர் ஒருவர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஷபீர் பேக்கரிவாலா, சமத் பேக்கரிவாலா, அப்துல் அஜீஸ் படேல், யூசுப் பட்டேல், அய்யூப் படேல், இப்ராஹிம் படேல், ஃபெஃப்டவாலா ஹாஜி அப்துல்லா, ஹசன் திஸ்லி மற்றும் இஸ்மாயில் அச்சோத்வாலா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், ஃபெஃப்டவாலா ஹாஜி அப்துல்லா என்பவர் லண்டனில் வசித்து வருவதாகவும், இதற்காக வெளிநாட்டில் பணம் திரட்டி அனுப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது.
பருச் மாவட்ட எஸ்பி ஆர்வி சுதஸ்மா கூறுகையில், " குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளனர். மேலும் 15 பேரின் விவரங்கள் கிடைத்துள்ளன. அதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். வெளிநாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி முஸ்லிம் அடிப்படைவாதிகள் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கை கிராமத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது.
வசவா இந்து சமூகத்தினரிடம் பணம் மற்றும் பிற உதவிகளை செய்து ஏமாற்ற மத மாற்றத்தில் ஈடுபட வைக்கின்றனர். இதன் மூலம், இரு சமூகத்தினரிடையே பகைமையை பரப்பி, அமைதியை குலைக்கும் முயற்சியாகும் என தெரிவிக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil