துபாயில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. உலக கோப்பையில் முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்ரீநகரில் மருத்துவ மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்முவில் 6 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆக்ராவில் காஷ்மீரை சேர்ந்த 3 பொறியியல் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதே போல, உதய்பூரில் உள்ள தனியார்ப் பள்ளி ஆசிரியர் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், " காவல் துறை, சிஐடி, என்ஐஏ ஆகியோர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.
கிடைத்த தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை சர்வதேச எல்லைக்கு அருகிலுள்ள சக் மங்கா குஜ்ரான் கிராமத்தைச் சேர்ந்த ஆறு முதல் ஏழு பேர், பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பியதற்காகத்
தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சம்பா துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் சர்மா தெரிவித்தார்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள், பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதுடன் அந்நாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி உள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பகிரப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாணவிகள் மீதான வழக்குப்பதிவை மனிதாபிமான அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மூவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து ஆக்ரா எஸ்.பி விகாஷ் குமார் கூறுகையில், " நம் நாட்டிற்கு எதிராக சிலர் வாட்ஸ்அப்பில் கருத்துகளை பதிவிடுகின்றனர். அவர்கள் கண்டறியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
ஆபிஎஸ் கல்லூரி தலைவர் ஆசிஷ் சுக்லா பேசுகையில், மூன்று மாணவர்கள் பாபர் அசாமுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தான் அணிக்கு ஆதராகவும் கருத்து பதிவிட்டனர். இதையறிந்ததும், அவர்களிடம் விசாரணை நடத்தி கல்லூரியிலிருந்தும், விடுதியிலிருந்தும் வெளியேற்றினோம். தற்போது, மாணவர்கள் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கின்றனர். அவர்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டனர். இனி, அதிகாரிகள் கையில் தான் உள்ளது" என்றார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை நபீஸா அட்டாரி. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், பாகிஸ்தான் வீரர்களின் படத்துடன் ‘நாம் வெற்றி பெற்றோம்’ என வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்த சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதை அறிந்த பள்ளி நிர்வாகம் நபீஸாவை பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் உள்ளூர் காவல் நிலையத்தில் நபீஸா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வீடியோ மூலம் நபீஸா மன்னிப்பு கேட்டுள்ளார்.
மாணவர்கள் மீதான காவல் துறை நடவடிக்கைகளுக்கு, காஷ்மீர் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரிக்கை வலுக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.