Rahul Gandhi: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான 2வது யாத்திரையை ராகுல் நடத்தி வருகிறார்.
மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த 2வது பாத யாத்திரையை ராகுல் காந்தி கடந்த 15ம் தேதி அன்று மணிப்பூரின் தௌபால் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோமில் இருந்து தொடங்கினார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். அவர் மார்ச் 20-21 அன்று மும்பையை அடைவார்.
வழக்கு
இந்நிலையில், அசாமில் உள்ள ஜோர்ஹாட் நகருக்குள் அனுமதிக்கப்பட்ட வழியிலிருந்து விலகியதாகக் கூறி ‘பாரத் ஜோடோ யாத்திரை’ மற்றும் அதன் தலைமை அமைப்பாளர் கேபி பைஜு மீது நேற்று வியாழக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
"பேரணி அனுமதிக்கப்பட்டபடி கே.பி சாலையை நோக்கிச் செல்லாமல் நகரத்தில் வேறு வழியே திரும்பியுள்ளது. இது அப்பகுதியில் குழப்பமான சூழ்நிலை உருவாக வழிவகுத்துள்ளது. மக்கள் திடீர் நெரிசலால் சிலர் கீழே விழுந்து நெரிசல் போன்ற சூழ்நிலை உருவானது. யாத்திரை மற்றும் அதன் தலைமை அமைப்பாளருக்கு எதிராக ஜோர்ஹட் சதார் காவல் நிலையத்தில் தானாக முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று ஒரு அதிகாரி கூறினார்.
யாத்திரை மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், அது சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது என்றும் எஃப்.ஐ.ஆர் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியாவை தொடர்பு கொண்டபோது, எஃப்ஐஆர் யாத்திரைக்கு முன் தேவையற்ற தடைகளை உருவாக்கும் ஒரு தந்திரம் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“பிடபிள்யூடி பாயின்ட்டில் போக்குவரத்தை மாற்றியமைக்கும் காவல்துறை இல்லை. ஒதுக்கப்பட்ட பாதை மிகவும் சிறியதாக இருந்தது, நாங்கள் ஒரு பெரிய கூட்டத்தைக் கொண்டிருந்தோம். எனவே, சில மீட்டர் தூரம் மாற்றுப்பாதையில் சென்றோம். ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல் நாளில் (அஸ்ஸாமில்) யாத்ராவின் வெற்றியைக் கண்டு பயந்து, இப்போது அதைத் தடம் புரட்ட விரும்புகிறார், ”என்று அவர் மேலும் கூறினார்.
அசாமில் ராகுலின் யாத்திரை ஜனவரி 25 வரை தொடருகிறது. அங்குள்ள 17 மாவட்டங்களில் 833 கி.மீ வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“