கேரள மாநிலம், காசர்கோடு பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானதில் சுமார் 150 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம், காசர்கோட்டில் அமைந்துள்ள நீலேஸ்வரம் என்ற இடத்தில் அஞ்சுதாம்பலம் வீரகாவு கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் களியாட்டம் என்று கூறப்படும் தெய்யம் நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு வாணவேடிக்கைகள் அரங்கேற்றப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Fireworks explosion at Kerala’s Kasaragod temple leaves over 150 injured
அப்போது, பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் எதிர்பாராத விதமாக தீப்பொறிகள் பற்றியதில் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் கூறுகையில், பட்டாசு வெடிப்பதற்கு கோயில் நிர்வாகத்தினர் உரிய அனுமதிபெறவில்லை எனவும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறிய அவர், மற்ற அனைவரும் காசர்கோடு சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
தெய்யம் கலைஞரான சுரேஷ் பாபு என்பவர் இந்த விபத்தை நேரில் பார்த்துள்ளார். அவர் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளாக தெய்யம் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். ஆனால், இது போன்று விபத்து ஏற்படுவது இதுவே முதல்முறை. விபத்துடன் சேர்த்து கூட்ட நெரிசலில் சிக்கி பலர் படுகாயமடைந்தனர். பனை ஓலை பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்ததில், அதன் தீப்பொறிகள் மற்ற பட்டாசுகள் மீது பற்றியதால் பெரும் விபத்து ஏற்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
வட கேரளாவில் அமைந்துள்ள கன்னூர் மற்றும் காசர்கோடு பகுதியில் நடத்தப்படும் தெய்யம் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது. குறிப்பாக, அஞ்சுதாம்பலம் வீரகாவு கோயில் திருவிழாவை தொடர்ந்து மற்ற கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“