Advertisment

காந்தாரா படம் பா.ஜ.க.,வுக்கும் வெற்றி; பின்னணி இதுதான்!

காந்தாரா படத்தைப் பாராட்டிய நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல்; படத்தைத் தயாரித்தது கர்நாடக அமைச்சருக்கு தொடர்புடைய நிறுவனம்; பா.ஜ.க தொடர்பு பின்னணி தகவல்கள் இதோ…

author-image
WebDesk
New Update
காந்தாரா படம் பா.ஜ.க.,வுக்கும் வெற்றி; பின்னணி இதுதான்!

Johnson T A

Advertisment

இந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக அரசின் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் குறிப்பிடத்தக்க அம்சம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் வெற்றி பெற்ற கன்னடப் படமான காந்தாராவைப் பாராட்டியது.

பா.ஜ.க தலைவரும் கர்நாடக அமைச்சருமான டாக்டர் சி.என் அஸ்வத்நாராயணுடன் நெருங்கிய தொடர்புடைய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ஜி20 தலைவர்களுக்கு மோடி வழங்கிய பரிசுகள் என்னென்ன?

ஹோம்பேல் பிலிம்ஸ் எல்.எல்.பி (Hombale Films LLP) என்ற தயாரிப்பு நிறுவனத்துடனான அவரது தொடர்பைப் பற்றி கேட்டபோது, ​​"திரைப்பட தயாரிப்பாளர் (விஜய் டி கிரகந்தூர்) எனது கசின் பிரதர் (Cousin Brother)," என்று அமைச்சர் அஸ்வத்நாராயணன் கூறினார். ஆனால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய பதிவுகள் கர்நாடக அமைச்சர் அஸ்வத்நாராயணன், நிறுவனம் மற்றும் விஜய் டி கிரகந்தூருக்கு இடையேயான தொடர்பு ஆழமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

publive-image

இரண்டு ரியல் எஸ்டேட் வணிக முயற்சிகளுக்காக கடந்த காலத்தில் ஹோம்பேல் நிறுவனத்தின் மூலம் பெற்ற கடனுக்கு அஸ்வத்நாராயணன் வங்கி உத்தரவாதம் அளித்து இருந்ததாகவும், விஜய் டி கிரகந்தூர் நடத்தும் வணிகங்களில் முதலீடு செய்ததாகவும் நிறுவனங்களின் பதிவாளர் (RoC) பதிவுகள் காட்டுகின்றன.

உலகளாவிய சந்திப்பின் தொடக்க நாளான நவம்பர் 2 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது உரையில் படத்தைப் பற்றி குறிப்பிட்டார், சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் "கிட்டத்தட்ட 20 மடங்கு வசூலித்தது" என்று கூறினார். "காந்தாரா என்பது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம், இது கர்நாடகாவின் கலாச்சாரத்தைக் காட்டுகிறது... முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினர் இந்தியா மற்றும் கர்நாடகாவின் மீது மிகவும் முற்போக்கான கொள்கைகளைக் கொண்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.

அதே நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் குழுவுடன் பெங்களூருவில் காந்தாரா படம் (#KantaraMovie) பார்த்தேன். நன்றாக உருவாக்கியுள்ளீர்கள் ரிஷப் ஷெட்டி (@shetty_rishab) (எழுத்தாளர்/ இயக்குனர்/ நடிகர்). இந்தப் படம் துளுவநாடு மற்றும் கரவாளியின் வளமான பாரம்பரியத்தை படம் பிடித்துக் காட்டுகிறது” என்று பதிவிட்டு இருந்தார்.

அஸ்வத்நாராயண் கர்நாடகாவின் உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறை அமைச்சராக உள்ளார். முன்னதாக, 2019 முதல் 2021 வரை பா.ஜ.க ஆட்சியில் துணை முதல்வராக இருந்தார்.

அதே நேரத்தில், ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரித்த திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகளில், அதாவது 2021 இல் ஹைதராபாத்தில் “சலார்” படத்தின் பட பூஜை முதல் மார்ச் 2022 இல் “கேஜிஎஃப்-2” டிரெய்லர் வெளியீடு வரை அஸ்வத்நாராயணன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

ஹோம்பேல் பிலிம்ஸ் (Hombale Films) (2017 இல் தொடங்கப்பட்டது) மற்றும் இரண்டு துணை நிறுவனங்களான ஹோம்பேல் உள்கட்டமைப்பு நிறுவனம் (Hombale Infrastructure Projects LLP (2011)) மற்றும் ஹோம்பேல் கட்டுமான நிறுவனம் (Hombale Constructions and Estates Pvt Ltd (2016)) ஆகியவை அதன் இயக்குநர்களாக விஜய் கிரகந்தூர் மற்றும் சாலுவே கவுடாவைக் கொண்டிருப்பதாக RoC பதிவுகள் காட்டுகின்றன. "காந்தாரா" படத்தின் தயாரிப்பாளர்களில் சாலுவே கவுடாவும் ஒருவர்.

2008-2013 க்கு இடையில் கர்நாடகாவில் பா.ஜ.கவின் முதல் முழு ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஹோம்பேல் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் வருமானம், 2011-2012ல் ரூ.64 லட்சமாக இருந்த வருவாய் 2012-13ல் ரூ.42 கோடியாகவும், 2013-14ல் ரூ.49 கோடியாகவும், 2014-15ல் ரூ.92 கோடியாகவும் உயர்ந்துள்ளது என்று பதிவுகள் காட்டுகின்றன. பின்னர் எதுவும் இல்லை.

2012 ஆம் ஆண்டு அமைச்சர் அஸ்வத்நாராயணனால் வடக்கு பெங்களூரில் உள்ள அவரது தொகுதியான மல்லேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட மல்லேஸ்வரம் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளையின் இயக்குனராகவும், 2018 ஆம் ஆண்டு தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி அமைச்சர் அஸ்வத்நாராயணன் தனது பங்குகளை வைத்திருக்கும் பத்மஸ்ரீ மெடிகேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் விஜய் டி கிரகந்தூர் உள்ளார்.

தற்செயலாக, 2019 இல் விஜய் டி கிரகந்தூரின் வருமானம் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.

ஹோம்பேல் உள்கட்டமைப்பு நிறுவன விஷயத்தில், 2012 ஆம் ஆண்டு விஜயா வங்கியில் இருந்து நிறுவனம் எடுத்த ரூ.15 கோடி வங்கிக் கடனுக்கு அஸ்வத்நாராயணன் உத்தரவாதம் அளித்ததாக RoC பதிவுகள் காட்டுகின்றன. RoC க்கு கடன் ஒப்புதல் மெமோவின் படி, கடனாளியான விஜய் டி கிரகந்தூர் உடன் அஸ்வத்நாராயணின் உறவு "கசின் பிரதர்" என வெளிப்படுத்தப்படுகிறது.

ஹோம்பேல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, 2018 ஆம் ஆண்டில் விஜயா வங்கியில் வாங்கிய கடனுக்கான வங்கி உத்தரவாதத்தை ரூ.95 கோடியிலிருந்து ரூ.175 கோடியாக உயர்த்தியதற்கான உத்தரவாதமாக அமைச்சர் அஸ்வத்நாராயணன் RoC பதிவேடுகளில் பட்டியலிடப்பட்டுள்ளார்.

பத்மஸ்ரீ மெடிகேர் மற்றும் மல்லேஸ்வரம் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கான RoC ஆவணங்களும், 2018 கர்நாடக தேர்தலுக்காக அஸ்வத்நாராயணன் தாக்கல் செய்த பிரமாண பத்திரமும் இதே போன்ற தொடர்பைக் காட்டுகின்றன.

பத்மஸ்ரீ மெடிகேர் நிறுவனத்தின் பங்குகளில் அஸ்வத்நாராயணன் ரூ.27 லட்சத்துக்கும் அதிகமாக முதலீடு செய்திருப்பதாகவும், அந்த நிறுவனத்துக்கு ரூ.68 லட்சம் கடனாக வழங்கியதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன. அமைச்சர் அஸ்வத்நாராயணின் தேர்தல் உறுதிமொழிப்படி, விஜய் டி கிரகந்தூர் இயக்குனராக உள்ள விளையாட்டு அறக்கட்டளைக்கு, அமைச்சர் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கியுள்ளார்.

ஹோம்பேல் பிலிம்ஸின் "கேஜிஎஃப்-1” (KGF-1) டிசம்பர் 2018 இல் வெளியான பிறகு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளது, ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த முதல் கன்னட திரைப்படமாகவும் கருதப்படுகிறது. "கேஜிஎஃப்-2" உலகம் முழுவதும் சுமார் 1,000 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.

"காந்தாரா" செப்டம்பர் 30 அன்று கன்னடத்தில் வெளியிடப்பட்டது, பின்னர் அதன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பயன்படுத்த இந்தி உட்பட பல மொழிகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. இது தட்சிண கன்னட பகுதியின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் மற்றும் மனித-இயற்கை மோதலின் பெரிய கதையை விவரிக்கும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளுடனான கிராம பின்னணிக் கொண்ட த்ரில்லர் படம் ஆகும்.

இந்த அனைத்து நிறுவனங்களின் வருவாயையும் விவரிக்கும் RoC பதிவுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஹோம்பேல் ஃபிலிம்ஸ் மற்றும் ஹோம்பேல் கட்டுமானங்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன என்பதைக் காட்டுகின்றன.

ஹோம்பேல் பிலிம்ஸ் தாக்கல் செய்த தகவலின்படி, 2017-18 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.36.43 லட்சமாக இருந்தது. 2018-19ல் வருமானம் ரூ.58 கோடியாக உயர்ந்து, 2019-20ல் ரூ.1.21 கோடியாகவும், 2020-21ல் ரூ.2.59 கோடியாகவும் குறைந்துள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்புகள் 2017-2018 இல் ரூ. 37.94 லட்சத்திலிருந்து 2020-2021 இல் ரூ. 225 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட ரூ. 188 கோடி கடனாகக் காட்டப்பட்டுள்ளது என்பதையும் பதிவுகள் காட்டுகின்றன. நடப்பு நிதியாண்டில் வெளியிடப்பட்ட "கேஜிஎஃப்-2" மற்றும் "காந்தாரா" ஆகியவற்றின் மதிப்பிடப்பட்ட வருவாயை இந்த எண்கள் பிரதிபலிக்கவில்லை.

ஹோம்பேல் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, 2016-ல் ரூ.153 கோடியாக இருந்த வருவாய் இரட்டிப்பாகி 2021-22 காலகட்டத்தில் ரூ.322 கோடியாக உயர்ந்துள்ளது, 2019-20-ல் ரூ.408 கோடி உச்ச வருவாயைப் பெற்றுள்ளது.

2008ல் ரூ.5 கோடியும், 2013ல் ரூ.15 கோடியும், 2018ல் ரூ.21 கோடியும் சொத்து இருப்பதாக அஸ்வத்நாராயணன் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் அறிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment