பாலின சமத்துவத்தைப் பரப்பும் வகையில், இந்தியாவில் முதன்முதலாக மும்பையில் போக்குவரத்து சிக்னல்களில் பெண் நடந்து செல்லும் டிராஃபிக் லைட்ஸ் நிறுவப்பட்டுள்ளது.
நாட்டில் முதன்முதலில், தாதர் மற்றும் மஹிம் இடையே 13 சந்திப்புகளில் 120 போக்குவரத்து சிக்னல்களில் டிராஃபிக் விளக்குகளில் பெண் நடந்து செல்லும் லைட் இடம்பெற உள்ளது. அதன் முதல் கட்டமாக மும்பை தாதரில் போக்குவரத்து சிக்னல்களில் பெண் நடந்து செல்லும் டிராஃபிக் லைட்ஸ் நிறுவப்பட்டுள்ளது. மும்பையில், சித்திவிநாயக் கோயில் முதல் மஹிம் வரையிலான நடைபாதை மேம்பாடு மற்றும் தோட்டங்கள் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மும்பை மாநகராட்சியின் (பி.எம்.சி) ‘கலாச்சார முதுகெலும்பு’ திட்டத்தின் கீழ் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கலாச்சார முதுகெலும்பு திட்டம் என்பது சிவசேனா அமைச்சரவை அமைச்சர் ஆதித்யா தாக்கரேவின் திட்டமாகும். தேவாலயம், சித்திவிநாயக் கோயில், சைத்யபூமி மற்றும் மஹிம் தர்கா ஆகியவற்றைக் கொண்ட காடெல் சாலையை மேம்படுத்துதல் மற்றும் நடைபாதையை மேம்படுத்துதல் இந்த திட்டத்தில் அடங்கும்.
தாக்கரே இது குறித்து ட்விட்டரில் படங்களை வெளியிட்டு, “நீங்கள் தாதரைக் கடந்து சென்றிருந்தால், நீங்கள் பெருமைப்படக்கூடிய ஒன்றைக் காண்பீர்கள். மும்பை மாநகராட்சியின் எளிய யோசனையுடன் பாலின சமத்துவத்தை உறுதி செய்கிறது. சிக்னல் விளக்குகளில் இப்போது பெண்களும் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலின சமத்துவத்தைப் பரப்ப ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகள், பெண் பாதசாரி படங்களைச் சேர்ப்பதற்காக போக்குவரத்து சிக்னல் விளக்குகள் மற்றும் அடையாளங்களை மாற்றியமைத்தன. இதுபோல பெண் பாதசாரி நடந்து செல்லும் முதல் சிக்னல் லைட் சனிக்கிழமை மும்பை தாதரில் நிறுவப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"