முதன்முறையாக இந்திய இனத்தைச் சேர்ந்த நாய் காவல்துறையில் சேரவிருக்கிறது.
மேற்கு வங்காளத்தின் பயிற்சி நிலையத்தில், பயிற்சி எடுத்துக் கொள்ளும் ஆஷா எனும் பெண் நாய்க்கு, கமாண்டர் சொல்வதைக் கேட்டால் பிஸ்கட் பரிசாகக் கிடைக்கும் எனத் தெரியும். உட்காரு, சல்யூட் அடி, ஓய்வெடு, நில் என கமாண்டர் சொல்வதை அப்படியே செய்கிறாள் ஆஷா.
ஏதேனும் இடைஞ்சலைக் கண்டால் தாவி குதிக்கிறாள். மேற்கு வங்க காவல்துறையினரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, காவல்துறையில் சேரும் முதல் இந்திய இன நாய் ஆஷா தான்.
2017 டிசம்பரில் சேதத்துக்கு ஆளாகியிருந்த 3 மாத நாய்க்குட்டியை மேற்கு வங்க மார்க்கெட்டில் மீட்டெடுத்த காவல்துறையினர் அதற்கு பயிற்சி கொடுத்துள்ளனர்.
முதலில் அதனை செல்லப்பிராணியாக வளர்க்கவே ஆசைப்பட்டுள்ளனர். ஆனால் ஐ.ஜி ஜெயராமன் நாட்டு நாய்க்கு பயிற்சி கொடுத்தால், அது எப்படி செய்யும் என்பதைத் தெரிந்துக் கொள்ள விரும்பியிருக்கிறார்.
தற்போது காவல்துறையின் முன்னணி நாய்கள் பட்டியலில் ஆஷா இடம் பிடித்திருக்கிறாள். ஜெர்மன் ஷேப்பெர்ட்ஸ், லேப்ராடர்ஸ், டாபர்மென் போன்ற வெளிநாட்டு நாய்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறாள்.
”அஷாவால் 6 அடி உயரம் வரை குதிக்க முடியும். பெரும்பாலான நாய்கள் இதனை செய்யாது” என்கிறார் நாய்களை கையாள்பவர்.
வெளிநாட்டு நாய்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது, இந்திய காலநிலையை அவைகள் ஏற்றுக் கொள்ள நிறைய மருந்துகள் கொடுக்கப்படும். அது பெரும் சவாலாக இருக்கும். ஆனால் அஷா விஷயத்தில் அப்படியானதொரு சிக்கல் இல்லை என்கிறார் பயிற்சி மையத்தின் அதிகாரி சந்தோஷ் திவாரி.
பரக்பூரில் பயிற்சியை முடித்திருக்கும் அஷா, தற்போது போஸ்டிங்கிற்கு காத்துக் கொண்டிருக்கிறாள்.