காஷ்மீரில் கடந்த சில நாள்கள் பயங்கரவாதிகள் தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று காஷ்மீர் செல்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, யூனியன் பிரதேசத்துக்கு அமித் ஷா முதல் முறையாகப் பயணம் மேற்கொள்கிறார். அவரின் வருகை காரணமாக, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, அமித் ஷா இன்று(அக்டோபர் 23) காலை 11 மணியளவில் ஸ்ரீநகர் வந்துவிடுவார் என்றும், அதைத் தொடர்ந்து ராஜ்பவனில் பாதுகாப்பு குறித்த உயர் மட்ட கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் எனக் கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் நான்கு கார்ப்ஸ் கமாண்டர்கள், காஷ்மீர் போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகள் உள்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில், காஷ்மீர் அரங்கேறும் படுகொலைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அண்மையில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பொதுமக்களுக்கு ஷா அஞ்சலி செலுத்தவுள்ளார். குறிப்பாக, 2019இல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின், ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
மறுநாள், ஜம்முவிற்கு செல்லும் அமித் ஷா, காலையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையும், பிற்பகலில் பொது பேரணி ஒன்றிலும் உரையாற்றவுள்ளார். திங்கட்கிழமை, ஷா SKICC இல் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து பேசவுள்ளார். இதற்கிடையில், அவர் பாஜக அலுவலகத்துக்கும் செல்லலாம் என்பதால், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமித் ஷா வருகை தொடர்பான பணிகள் கடந்த ஒரு மாதமாகவே திட்டமிட்டு வந்தாலும், தற்போது காஷ்மீர் நிலவும் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், முஸ்லிம் அல்லாத காஷ்மீரிகள் உட்பட 11 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், 17 பயங்கரவாதிகளைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
இருப்பினும், மத்திய அமைச்சரின் வருகையின்போது எவ்வித தாக்குதலும் நடைபெறக்கூடாது என்பதற்காக சிஆர்பிஎப் வீரர்கள் கூடுதலாகச் சோதனை சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil