உத்தரகாண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: First visuals of workers trapped in Uttarkashi tunnel emerge
இதனையடுத்து, அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 10-வது நாளாக இன்றும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ளவர்களின் முதல் வீடியோ வெளியானது. சுரங்கப்பாதையில் 10 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில் முதல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/u8T6KJfvzmqFiJ7BrXWE.jpg?resize=600,338)
இடிபாடுகள் வழியாக செலுத்தப்பட்ட 6 அங்குல குழாய் வழியாக கேமரா அனுப்பப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபி கேமரா மூலம் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வீடியோ எடுத்துள்ளனர். மேலும் மீட்புக்குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளிகளுடன் பேசும் முதல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மஞ்சள் மற்றும் வெள்ளை ஹெல்மெட் அணிந்த தொழிலாளர்கள் குழாய் மூலம் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு மீட்புக் குழுக்களுடன் உரையாடலில் ஈடுபடுவதைக் காணலாம். இந்த வீடியோ வெளியாகி இருப்பது தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
முன்னதாக நேற்று திங்கள்கிழமை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியை அழைத்து மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக உத்தரகாண்ட் முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தேவையான மீட்பு உபகரணங்கள் மற்றும் ஆதாரங்களை மத்திய அரசு வழங்கி வருவதாகவும், மத்திய அரசுக்கும் உத்தரகாண்ட் அரசுக்கும் இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு மூலம் தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் மோடி கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“