குஜராத் கடற்பகுதிக்கு உட்பட்ட அரபிக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது திடீரென பாகிஸ்தான் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிராவில் பால்கரை சேர்ந்த மீனவர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே (32) உயிரிழந்தார். மற்றொரு மீனவர் காயமடைந்தார்.
குஜராத் மாநிலம் போர்பந்தரின் ஓகா கடற்கரையிலிருந்து அக்டோபர் 26-ம் தேதி 'ஜல்பாரி' என்ற மீன்பிடி படகில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுள்ளனர். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ஜக்காவ் கடற்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர் அவர்களை விரட்டி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவரின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிசூடு தாக்குதலில் காயமடைந்த திலீப் என்ற மீனவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த மீனவருக்கு 6 மற்றும் 8 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால், அவருக்கு குடும்பத்திற்கு அரசாங்கம் உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், பாகிஸ்தானிடம் தூதரகம் வாயிலாக இப்பிரச்சினை எடுத்துச்செல்லப்படும் என அரசு அதிகாரிகள் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், போர்பந்தரில் உள்ள மீனவர் தலைவர் மணீஷ் லோதாரி கூறுகையில், "ஸ்ரீ பத்மனி என்ற மற்றொரு மீன்பிடி படகில் இருந்த ஆறு மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்து, படகை பறிமுதல் செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ பத்மனி, ஜல்பாரி ஆகிய இரண்டு படகுகளும் குஜராத்தின் ஜகாவ் கடற்கரையில் மீன்பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் குழுவை சேர்ந்தது தான் என கூறப்படுகிறது.
கடந்தாண்டு பிப்ரவரியில் தான் அதிகளவிலான இந்திய மீனவர்களை பாகிஸ்தான் சிறைப்பிடித்துள்ளது. பிப்ரவரி 13 முதல் 18 வரை மட்டுமே நான்கு வெவ்வேறு சமயங்களில் 11 மீன்பிடி படகுகள் மற்றும் 63 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.