சட்டம் 497 ஆண் பெண் தகாத உறவு குற்றமில்லை என அதிரடி தீர்ப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய் சந்திரசுட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்திய தண்டனைச் சட்டம் 497 பற்றிய முக்கிய தீர்ப்பினை இன்று வெளியிட்டுள்ளனர்.
திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொண்ட ஆண்களை தண்டிக்கும் வகையில் இந்திய தண்டனைச் சட்டம் 497 அமைந்திருந்தது.
திருமணமான பெண்ணுடன் தகாத உறவு கொண்டிருக்கும் ஆண்களை குற்றவாளியாக கருதும் இச்சட்டம், அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தினை நீக்க வேண்டும் என ஜோசப் சைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சட்டம் 497 ஆண் பெண் தகாத உறவு குறித்த வாதம்
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கலீஸ்வரராம் ராஜ் “இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவில் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்ணிற்கும் இடையேயான உறவு முறை குறித்து எங்கும் தெரிவிக்கப்படவில்ல. ஆனால் திருமணமான பெண்களுடன் தகாத உறவில் இருக்கும் ஆண்களை தண்டிக்கும் வகையில் அச்சட்டம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் பெண்களுக்கு அந்த தண்டனைகள் ஏதும் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “இந்த சட்டம் 1860ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் பிரபு மெக்கலே அவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம். திருமண உறவு முறைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதால் இந்த சட்டம் நிச்சயம் பழக்கத்தில் இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்து.
இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் பின் வருமாறு தீர்ப்பினை வெளியிட்டது.
1. ஆண் பெண் என்ற பேதம் சட்டத்திற்கு இல்லை.
2. திருமண உறவின் மாண்பினை காப்பது ஆண் மற்றும் பெண் என இருபாலருக்குமான கடமை.
3. ஆனால் அதே நேரத்தில் ஆண்களை மட்டும் தண்டித்தல் என்பது முற்றிலும் தவறு.
4. வயது வந்த இருவருக்கும் மத்தியில் இருக்கும் உறவினை குற்றம் என்று எப்படி கூற முடியும். வேண்டுமானால் இதனை காரணமாக காட்டி விவாகரத்து வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம்.
5. ஆண்கள் பெண்களுக்கு எஜமானர்கள் அல்ல. பெண்கள் தனக்கு தேவையான துணையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்றுள்ளனர்
என்று இன்றைய தீர்ப்பினை பதிவு செய்திருக்கிறார்கள் நீதிபதிகள். மேலும் இந்திய தண்டனைச் சட்டம் 497னை ரத்து செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.