கேரளாவில் உள்ள மலன்கரா ஆர்த்தோடெக்ஸ் சிரியன் சர்ச்சில் இருந்த ஐந்து பாதிரியார்களை அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்துள்ளது, தேவலாய நிர்வாகம். ஒரு பெண்ணை ஐந்து பாதிரியார்கள், பல ஆண்டுகளாக, மிரட்டி பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியதால் தேவாலய நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கோட்டயத்தினை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நான்கு தேவாலயங்களின் பாதிரியாளர்களையும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாரையும் தேவலாயப் பொறுப்பிலிந்து நீக்கியிருக்கின்றது. மேலும் தேவாலயம் சார்பாக நடக்கும் எந்தவொரு அலுவலக மற்றும் இதர நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள அவர்களுக்கு தடை விதித்திருக்கின்றது.
இது தொடர்பாக தேவாலயத்திற்கு அப்பெண்ணின் கணவர் அனுப்பிய புகாரில், “தேவாலய சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பாவமன்னிப்பு காரணங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதனையே பயன்படுத்தி என் மனைவியை துன்புறுத்தியிருக்கின்றார்கள்” என்று குறிப்பிட்டிருக்கின்றார். எட்டு பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அப்பெண்ணின் கணவர் மற்றும் தேவாலய நிர்வாகிகள் பேசிய ஆடியோ க்ளிப் ஒன்று சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவி பெரிய சர்ச்சையினைக் கிளப்பியுள்ளது. “திருமணத்திற்கு முன்பு அவளை ஒரு பாதிரியார் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கின்றார். திருமணம் ஆன பின்பு, தேவாலயத்திற்கு வந்த புதிய பாதிரியாரிடம் நடந்ததைக் கூறி பாவமன்னிப்பு கேட்டிருக்கின்றார் அப்பெண். ஆனால் அதை அவள் கணவனிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டி அப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலை மேற்கொண்டிருக்கின்றார் புதிய பாதிரியார். அவர் மேலும் மற்றொருவரை இதில் கூட்டாளியாக்க, பெரிய விவகாரமாக அது மாறிவிட்டது.
தேவாலயத்தில் இருக்கும் நிறைய முக்கிய நபர்கள், இந்த புகாரினைத் திரும்பப் பெற வேண்டி அப்பெண்ணின் கணவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக பேசிய தேவாலய அறங்காவலர் ஜான் “இப்புகாரினை காவல்த்துறை வரை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அவர்கள் அளித்த புகாரில் ஒரு பாதிரியார் 380 முறை தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். 380 முறை என்று போகும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இந்த ஐந்து பாதிரியார்களில் ஒருவர் அப்பெண்ணின் பதின்பருவத்தில் அவருடன் காதல் வயப்பட்டிருந்தவர். மற்றொருவர் அப்பெண் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் உறவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.