வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய முனையம்-1ல் கூரையின் ஒரு பகுதி கார்கள் மீது இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அந்த டெர்மினலில் இருந்து அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்க:
சஃப்தர்ஜங் நிலையத்தில் இன்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 228.1 மி.மீ மழைபொழிவுடன், தேசிய தலைநகர் டெல்லி இடைவிடாத மழை பெய்து வரும் ஒரு நாளில் இந்த விபத்து நடந்துள்ளது.
“இன்று அதிகாலையில் இருந்து பெய்த கனமழையின் காரணமாக, டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ன் பழைய புறப்பாடு முனையத்தில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. காயங்கள் பதிவாகியுள்ளன, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் வழங்க அவசரகால பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று டெல்லி சர்வதேச விமான நிலைய லிமிடெட் (DIAL) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
டெர்மினல் 1 இலிருந்து அனைத்து புறப்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கையாக செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இடிந்து விழுந்த கூரையின் கீழ் ஒருவர் சிக்கியிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சார், டெர்மினல் 1ல் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் கண்காணித்து வருவதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். “மீட்பு பணியாளர்கள் தளத்தில் வேலை செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் T1 இல் உதவ விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் கனமழை பெய்து வருகிறது, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தில்லி மற்றும் என்.சி.ஆர் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை பலத்த மழை பெய்தது, அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு டெல்லியில் மிதமான முதல் தீவிரமான மழை தொடரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக தலைநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 08.30 மணி வரையிலான மொத்த மழையானது சஃப்தர்ஜங்கில் 153.7 மிமீ மற்றும் பாலம் விமான நிலையத்தில் 93 மிமீ பதிவாகியுள்ளது.
கடுமையான மழையின் காரணமாக, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் சாலைகள் வழுக்கலாம், பார்வை குறைவு, போக்குவரத்து இடையூறு மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளூர்மயமாக்கப்பட்ட நீர்நிலைகள் ஆகியவற்றைக் கவனிக்க ஒரு ஆலோசனையை வழங்கினர். தண்ணீர் தேங்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், பாதைகளில் போக்குவரத்து நெரிசலை சரிபார்க்கவும், வானிலை எச்சரிக்கை வலியுறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“