காவிரி நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது. எனவே காவிரியில் இருந்து 90 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலைக்குள் ஒகேனக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி 50 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
இந்த தண்ணீர் இன்று மாலைக்குள் ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கபினி அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், காவிரியில் நீர்வரத்து 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.