புல்லாங்குழல் வாசிக்கும் இசை கலைஞர், சாதி ரீதியான ஒடுக்குமுறையை சந்தித்ததாகவும், 2023ம் ஆண்டிலும், திறமையை விட சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை உள்ளது வேதனை அளிப்பதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞர் ஸ்ரீராக். இவர் பதிவிட்ட முகநூல் பதிவு தற்போது முக்கிய பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பரதநாட்டிய பெண் கலைஞர் மற்றும் கலைமாமணி விருது பெற்றவர், ஸ்ரீராகை தனது மாணவர்களின் அரங்கேற்ற நிகழ்வில் புல்லாங்குழல் வாசிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். கர்நாடகாவின் வெவ்வேறு பகுதிகளில் 2 அரக்கேற்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இந்த வாய்ப்பு கிடைத்தபோது தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக ஸ்ரீராக் முகநூல் பதிவில் கூறியுள்ளார். ஆனால் அவருடன் பணியாற்றும்போது, இதற்கு நேர்மாறாக வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
ஸ்ரீராக் அவரை முதலில் சந்தித்தபோது, ’நீங்கள் ஐயங்கார் சமூகத்தை சேர்ந்தவர்தானே என்பதுதான் முதல் கேள்வியாக இருந்துள்ளது. இதற்கு ஸ்ரீராக் இல்லை என்று சொன்னதும், அவர் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளார் மேலும் அது வெளிப்படையாக தெரிந்துள்ளது. நிகழ்ச்சிக்கான தங்கும் இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதில் கூட சாதிய ஒடுக்குமுறை வெளிப்படதாக ஸ்ரீராக் கூறியுள்ளார்.
மங்களூரில் நடைபெற்ற அரகேற்ற நிகழ்வில், ஸ்ரீராக் நன்றாக வாசித்தபோதும், அவர் நீக்கப்பட்டதாக வாட் ஆப்-ல், அவரது குழுவினர் குறுஞ்செய்தி அனுப்பினர். அவருக்கு பதிலாக வேறுறொரு புல்லாங்குழல் இசைக்கலைஞர் நியமிக்கப்பட்டதாக அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அரங்கேற்ற நிகழ்வுக்கான பயிற்சி நேரத்தில், ஸ்ரீராக் சரியான ஸ்ருதியில் வாசிக்கவில்லை என்றும் அப்பெண் கலைஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக மற்ற இசைக் கலைஞர்களிடம் ஸ்ரீராக் கேட்டபோது, அவர் சரியாக வாசித்ததாக கூறியுள்ளனர். மேலும் இந்த பெண் கலைஞரின் தூண்டுதலால், மாணவர்களின் பெற்றோரும் அவர் சரியான ஸ்ருதியில் வாசிக்கவில்லை என்று கூறி, ஸ்ரீராகின் இசை திறமையை அவமதித்துள்ளனர்.
இந்நிலையில் இவரைப்போன்று வேறொரு மிருதங்கம் வாசிக்கும் இசைக் கலைஞரை சாதி ரீதியாக இழிவாக நடத்தியதாக ஸ்ரீராக் கூறியுள்ளார். கிட்டதட்ட 30 வருடங்கள் அனுபவம் உள்ள அவரை முதல் நாளிலே, வாசிக்க வேண்டாம் என்று அவமதித்து, அப்பெண் கலைஞர் அனுப்பி உள்ளார். மிருதங்கம் வாசிக்கும் இசைக்கலைஞர், கிட்டதட்ட அனைவரின் முன்பும், மனம் உடைந்து அழும் நிலைக்கு சென்றார் என்று ஸ்ரீராக் கூறியுள்ளார்.
’மேலும் 2023ம் ஆண்டிலும்கூட , திறமையைவிட சாதி மற்றும் நிறத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைக்கு எதிராக நாம் கேள்வி எழுப்ப வேண்டும். இதுபோன்ற கலைஞர்களுக்கு, கலைமாமணி போன்ற உயரிய விருது கிடைத்திருப்பது , கலைமாமணி விருதுக்கு கிடைத்த அவமானமாக கருதுகிறேன் என்று ஸ்ரீராக் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது முகநூல் பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“