மத்திய அமைச்சரும், அமேதி தொகுதி பா.ஜ.க எம்.பி.யுமான ஸ்மிருதி இரானி பற்றி அஜய் ராய் அவதூறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜய் ராய் நேற்று (செவ்வாய்கிழமை) தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார், தொடர்ந்து தான் எந்த தவறான மொழியையும் பயன்படுத்தவில்லை, தான் பேசியது உள்ளூர் பேச்சுவழக்கு என்று கூறினார். காங்கிரஸைச் சேர்ந்த அஜய் ராய், கடந்த 10 ஆண்டுகளாக கிழக்கு உ.பி-யின் முகமாக இருந்து வருகிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவாரா? என அஜய் ராயிடம் செய்தியாளர்கள் கடந்த திங்களன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், சோனியா காந்தி குடும்பத்தின் தொகுதியாக அது இருந்து வந்துள்ளது. ராகுல் அங்கு எம்.பியாக இருந்துள்ளார். ராஜீவ் காந்தியும், சஞ்சய் காந்தியும் அத் தொகுதியில் எம்.பியாக இருந்திருக்கிறார்கள். அமேதிக்கு சேவையாற்றியுள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது அமேதியில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஜகதீஷ்பூர் தொழிற்பேட்டை பகுதியில் பாதி தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இப்போது அமேதி எம்.பியாக இருக்கும் ஸ்மிருதி இரானி இங்கு வந்து ஆட்டம் போட்டுவிட்டு செல்கிறார். ‘லட்கா-ஜட்கா’ “எனக் கூறினார். அவரைப் பற்றி அவதூறாகப் பேசினார். அஜய் ராய் 5 முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தியை ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். அஜய் ராய்யின் பேச்சு குறித்து பேசிய ஸ்மிருதி, ராகுலுக்கும் சோனியா காந்திக்கும் அறிக்கை எழுதித் தர புதிய நபர் தேவைப்படுகிறார் என ட்விட் செய்திருந்தார்.
வழக்குப் பதிவு
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜ,க மாவட்ட மகளிர் அணி தலைவர் புஸ்பா தேவி, சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் காவல் நிலையத்தில் ராய் மீது புகார் அளித்தார், அதன் பேரில் ராய் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும் (NCW) ராய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது. டிசம்பர் 28-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆஜராகுமாறு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
52 வயதான அரசியல்வாதி அஜய் ராய் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அமேதி மோசமான நிலையில் உள்ளது. சாலைகள் சேதமடைந்து, பல ஆண்டுகளாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் தங்கள் தலைவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் யாராவது டூர் வந்து செல்வதை என்னவென்று சொல்வார்கள்? இது உள்ளூர் வழக்கு, தவறான மொழி எதுவும் இல்லை என்று ராய் கூறினார்.
முன்னாள் பா.ஜ.க தலைவர்
அஜய் ராய் தனது அரசியல் வாழ்க்கையை பா.ஜ.கவில் தொடங்கினார். பின்னர் 2012 இல் காங்கிரஸில் இணைந்தார். ராய் 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ராய், வாரணாசியில் உள்ள கோலஸ்லா தொகுதியில் இருந்து 1996, 2002 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வென்று மூன்று முறை உ.பி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராய் 2009 இடைத்தேர்தலில் கோலஸ்லா தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் வாரணாசியில் உள்ள பிந்த்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஐந்தாவது முறையாக எம்எல்ஏ ஆனார்.
2015-ம் ஆண்டில் கங்கையில் சிலைகளை கரைப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து உள்ளூர் மக்களுடன் காவல்துறையினரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் வன்முறையில் ஈடுபட்டதாக ராய் கைது செய்யப்பட்டார். இதில் 7 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார்.
ராய் 2017 மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தல்களில் ராய் தோல்வியடைந்தார். ஆனால் காங்கிரஸில் குறிப்பிடத்தக்க பொறுப்புகளைத் தொடர்ந்து வகித்து வருகிறார். பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா மாநிலப் பிரிவை சமீபத்தில் மாற்றியமைத்ததில், கிழக்கு உ.பி.யின் 12 மாவட்டங்களை தனது பொறுப்பில் கொண்டுள்ள பிரயாக்ராஜ் பிராந்தியத்தின் கட்சியின் தலைவராக அஜய் ராய் நியமிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் மீது காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கையை அறியலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/