காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த திங்களன்று வக்ஃபு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, வக்ஃபு நில ஒதுக்கீட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மீது அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறி, எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 15) நடைபெற்ற கூட்டத்தில், பாஜக எம்பிக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மற்றொரு புறம், எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக ஆளுங்கட்சி எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஷிவ் சேனா எம்பி அரவிந்த் சவாந்த் கூறுகையில், சட்ட திட்டங்கள் மற்றும் அறமற்ற வகையில் ஆளுங்கட்சியினர் செயல்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுதியுள்ள கடிதத்தில், அவதூறான கருத்துகளை பேசுவதற்கு, குழுவின் தலைவர் எதற்காக அனுமதி வழங்கினார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.