சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் ராய்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் ஜோகி இன்று கோமா நிலைக்கு சென்றுவிட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அஜித் ஜோகிக்கு சனிக்கிழமை அவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அஜித் ஜோகி கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜித் ஜோகி உடல்நிலை குறித்து ஸ்ரீ நாராயணா மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், “காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகியின் நரம்பியல் செயல்பாடுகள் கிட்டத்தட்ட இல்லை. தற்போது அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார்” என்று கூறினார்.
அஜித் ஜோகி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுனில் கெம்மா ஊடகங்களுக்கு கூறுகையில், “அவரது இதய செயல்பாடு இப்போது இயல்பாக உள்ளது. அவருடைய இரத்த அழுத்தம் மருந்துகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அவரது மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதில் இடையூறு ஏற்பட்டது. இது அவரது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். மருத்துவ வழக்கில் இது ஹைபோக்ஸியா என்று அழைக்கப்படுகிறது. இப்போதைக்கு, அஜித் ஜோகியின் நரம்பியல் செயல்பாடு கிட்டத்தட்ட இல்லை. எளிமையாக சொல்ல வேண்டுமானால், அவர் கோமாவுக்குள் சென்றுவிட்டார் என்று சொல்லலாம். தற்போது அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார். அவரது உடல்நிலையை மேம்படுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், தற்போதைய நிலைமை கவலை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அஜித் ஜோகிக்கு 8 சிறப்பு மருத்துவர்கள் குழுவால் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு அஜித் ஜோகியின் உடல்நிலை நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பிடுவார்கள் என்று மருத்துவ இயக்குனர் சுனில் கெம்மா தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் அஜித் ஜோகி தனது வீட்டு தோட்டத்தில் இருந்தபோது மயங்கி சரிந்து விழுந்தார். அஜித் ஜோகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு ஒரு மூத்த தீவிர சிகிச்சை நிபுனரால் அவரது வீட்டில் இதயம் நுரையீரல் செயல்படுவதற்கு (சிபிஆர்) வழங்கப்பட்டது. அவரது ஈ.சி.ஜி மற்றும் துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால், அவரது சுவாசம் இன்னும் சாதாரணமாக இல்லை. அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அஜித் ஜோகியின் மனைவியும் கோட்டா தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரேணு ஜோகி மற்றும் அவரது மகன் அமித் ஆகியோர் அவருடன் மருத்துவமனையில் உள்ளனர்.
அஜித் ஜோகியின் மகன் அமித் டுவிட்டரில், தனது தந்தையின் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருக்கு இப்போது மருந்துகளுடன், சத்தீஸ்கரில் வசிக்கும் 2.5 கோடி மக்களின் நல்வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் தேவை.” அமித் குறிப்பிட்டுள்ளார்.
ஜன்தா காங்கிரஸ் சத்தீஸ்கர்(ஜே) இன் நிறுவனரான அஜித் ஜோகி தற்போது அம்மாநிலத்தின் மார்வாஹி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக உள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"