சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், திங்கள்கிழமை காலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களால் காங்கிரசில் சேர்க்கப்பட்டார்.
லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவரும், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நீண்டகால உறுப்பினருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் தனக்கு டிக்கெட் மறுக்கப்பட்டபோது, பா.ஜ.க தலைமை தன்னை நடத்திய விதம் குறித்து அதிருப்தி அடைந்ததாகக் கூறினார். ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், சமீப நாட்களில் பா.ஜ.க.,வில் இருந்து வெளியேறிய இரண்டாவது முக்கிய லிங்காயத் முகமாக இருக்கிறார், முன்னதாக முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவடியும் சீட்டு மறுக்கப்பட்டதால் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘அதானி ஊழலின் அடையாளம்’: கே.ஜி.எஃப்.பில் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இணைந்துள்ளதால் தேர்தலில் காங்கிரஸ் 150 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று மல்லிகார்ஜூன கார்கே கூறினார். “எங்கள் கட்சியை உடைத்து பா.ஜ.க தனது ஆட்சியை அமைக்க முடியாது என்பதே இதன் பொருள். எனவே, அதிகபட்ச இடங்களை (மே 10-ம் தேதி தேர்தலில்) வெல்வதே எங்களது இலக்கு,” என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெகதீஷ் ஷெட்டர், “கட்சியை ஒழுங்கமைத்து வளர்த்தவர்களில் நானும் ஒருவன், குறிப்பாக வடக்கு கர்நாடகா பகுதியில் கட்சி வளர உழைத்தவன். பா.ஜ.க, எனக்கு எல்லா மரியாதையையும், பதவியையும் கொடுத்துள்ளது. அதற்கு கைம்மாறாக, நான் நேர்மையான முறையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றிய விசுவாசமான தொண்டராக இருந்தேன்,” என்று கூறினார்.
இருப்பினும், “ஒரு மூத்த தலைவரை கட்சி சரியாக நடத்தாதது குறித்து நான் அதிருப்தி அடைந்தேன். ஏப்ரல் 11ம் தேதி எனக்கும் (முன்னாள் அமைச்சர்) கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் இல்லை என்று ஒரு சிறு பையனிடம் அல்லது முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனவரிடம் சொல்வது போல் எனக்கு தகவல் கிடைத்தது. ஒரு வாரத்துக்கு முன்பே சொல்லிவிட்டு மற்ற பொறுப்புகளை நிறைவேற்றச் சொன்னால் ஒப்புக்கொண்டிருப்பேன்,” என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
சில தனிநபர்களால் கட்சி கட்டுப்படுத்தப்படுவதாகவும், தான் கட்ட உதவிய வீட்டில் இருந்து தான் வெளியேற்றப்படுவதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் குற்றம் சாட்டினார். “நான் கட்ட உதவிய வீட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்டால், எனக்கு மாற்று எதுவும் இல்லை… கட்சிதான் முக்கியம், தனிநபர்கள் அல்ல என்று சொல்லி பா.ஜ.க.,வைக் கட்டினோம். இன்று கட்சி முழுவதையும் ஒரு சிலர் மட்டுமே கட்டுப்படுத்தும் வகையில் கட்சி நடத்தப்படுகிறது. நான் பிரதமர் நரேந்திர மோடியையோ, மத்திய அமைச்சர் அமித்ஷாவையோ, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டாவையோ விமர்சிக்கவில்லை. மாநில பிரிவில் நடந்துள்ள சம்பவங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்,” என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
ஜெகதீஷ் ஷெட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியைச் சுற்றியுள்ள பல தொகுதிகளில் காங்கிரஸுக்கு இந்த சேர்க்கை பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஷெட்டர் போட்டியிடுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil