மாநிலத்தின் கடன் சுமை ஏற்கனவே கழுத்தை நெரிக்கும் அளவில் இருக்கும் நிலையில் மேலும் கடன் பெறுவது என்பது மாநிலத்தின் நிதிச் சுமையை அதிகரிப்பதோடு ஏற்கனவே 14 சதவீத வருமானத்தை கடனுக்காக திருப்பி செலுத்தும் நிலையில், இந்த புதிய கடன் நிதிச் சுமையை அதிகரிக்கும். என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்
முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றுகின்ற பட்ஜெட் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், கடன் பெறுவது வளர்ச்சிக்கான ஒரு வழிதான் என்றாலும், மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பெருக்கும் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் தொழிற்சாலைகளையும் கொண்டு வருவது அரசின் கடமையாகும். அவ்வாறான திட்டங்கள் ஏதும் இல்லாமல், தொடர்ந்து கடன் பெற்று வருவது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் எதிர்கால நன்மைக்கும் உகந்தது அல்ல.
தற்போதைய புதுச்சேரி அரசு புதுச்சேரி மாநிலத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. பொலிவுரு நகர திட்டத்தின் கீழ் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரையிலான பாலம் தற்போது தான் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் போக்குவரத்து நெரிசலால் மாநில மக்கள் அவதியுற்று வரும் நிலையில், சாலை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் புதிய சாலைகளை அமைக்கவும் மேம்பாலங்களை தேவையான இடங்களில் நிறுவுவதற்கும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும் உழவர் சந்தைகளை மேம்படுத்தும் எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நவீன வேளாண் இயந்திரங்களை வாங்குவதற்காக குறிப்பிட்ட நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை.
வெள்ளம் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. கால்நடைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் கால்நடை மருந்தகங்களை தரம் உயர்த்துவது எந்தவித பயனையும் கால்நடை விவசாயிகளுக்கு வழங்காது என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“