இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், உத்தரபிரதேசம் மாநில கேபினட் அமைச்சருமான சேத்தன் சவுகான் கொரோனா பாதிப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 73. சேத்தன் சவுஹான் உயிரிழந்ததை அவரது தம்பி புஷ்பேந்திர சவுகான் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் மாநில தொழில்நுட்ப கல்வித் துறையை அமைச்சராக பதவி வகித்த கமல் ராணி வருண் அண்மையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இவரையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இரண்டாவது அமைச்சராக சேத்தன் சவுகான் பலியாகி உள்ளார்.
சேத்தன் சவுகான் உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தில், வீட்டுக் காவல், மக்கள் நலவாழ்வு, சமூக பாதுகாப்பு உள்ள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். சேத்தன் சவுகானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து லக்னோவில் உள்ள சஞ்ஜய் காந்தி பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய சிறுநீரகம் பழுதடைந்ததைத் தொடர்ந்து உயிர் பாதுகாப்பு ஆதரவில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் சேத்தன் சவுகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேத்தன் சவுகான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கும் (டி.டி.சி.ஏ) பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"