4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது, தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், ‘சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் நிச்சயம் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகளில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இதில், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 2 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க-விடம் ஆட்சியை இழந்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க-வுக்கு தலைவர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், “சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், நிச்சயம் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறியிருப்பதாவது: “சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், நிச்சயம் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; பா.ஜ.க-வுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி பிரதமர் மோடியின் சிறந்த தலைமைக்கான சான்று” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
4 மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக, தி.மு.க இளைஞரணி தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சமத்துவத்துக்கு எதிரான சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது தேசிய அளவில் சர்ச்சையானது. இது தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியிலும்கூட ஆதரவும் எதிர்ப்பும் கலந்திருந்தது. உதயநிதி சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு பா.ஜ.க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“