பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று(ஆக.24) மதியம் 12:07 மணிக்கு காலமானார்.
அருண் ஜெட்லி குறித்த இந்தியன் எக்ஸ்பிரஸின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இதோ,
அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனையால் கடந்த 9-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.
இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.
1980 ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட அருண் ஜெட்லி, 1999 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில், தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டிந்தார்.
2014 முதல் 2017 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 2014 முதல் 2016 வரை தகவல், தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் அவர் பதவி வகித்தார்.
மத்திய நிதி அமைச்சராக அருண் ஜெட்லி பதவி வகித்த போது தான், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை. மேலும் தனக்கு அமைச்சர் பதவி எதுவும் வேண்டாம் என்றும் கட்சி மேலிடத்தில் தெரிவித்திருந்தார்.
அருண் ஜெட்லியின் மறைவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "அருண் ஜெட்லி அரசியலில் ஜாம்பவான் ஆவார். இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராவார். அவரது மறைவு மிகுந்த மனவேதனையானது" என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மரணம், பாஜகவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.