ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Won’t quit politics, open to floating new party: Former Jharkhand CM Champai Soren
“இது என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம். எனது ஆதரவாளர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளதால் நான் அரசியலை விட்டு விலக மாட்டேன். இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது, நான் ஒரு புதிய அணியை உருவாக்கலாம்” என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) மூத்த தலைவர் சம்பாய் சோரன் செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான ஜிலிங்கோராவை அடைந்த சிறிது நேரத்திலேயே கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, புதிய கட்சியைத் தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேர்வது என மூன்று வாய்ப்புகளை பரிசீலிப்பதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் முன்னால் முதல்வர் சம்பாய் சோரனின் இந்த கருத்து வந்துள்ளது.
சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு பதிவில், “ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு, ஜூலை 3-ம் தேதி அவரது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் எந்த விளக்கமும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக சம்பய் கூறினார். “நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை நான் கேட்டபோது, ஜூலை 3-ம் தேதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதுவரை எந்த அரசாங்க நிகழ்ச்சிகளிலும் என்னால் கலந்து கொள்ள முடியாது என்றும் என்னிடம் கூறப்பட்டது” என்று சம்பாய் சோரன் தெரிவித்தார்.
“பல ஆண்டுகளாக கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடத்தப்படாமல், ஒருதலைப்பட்சமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்போது, நான் யாரிடம் சென்று எனது பிரச்சினைகளை கூறுவது? இந்தக் கட்சியில் நான் மூத்த உறுப்பினர்களாகக் கருதப்படுகிறேன், மீதமுள்ளவர்கள் ஜூனியர்கள், மேலும், என்னை விட சீனியரான முதல்வர் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை, பிறகு எனக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? அவர் சுறுசுறுப்பாக இருந்திருந்தால், அனேகமாக, நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காட்ஷிலா தொகுதியில் இருந்து தனது மகனை வேட்பாளராக நிறுத்த சம்பாய் சோரனின் கோரிக்கையை மறுத்ததால் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றியதாக ஜே.எம்.எம் வட்டாரங்கள் தெரிவித்தன. “அவர் (சம்பாய் சோரன்) விலகுவதற்கான ஒரு முன்மாதிரியை உருவாக்குகிறார், இதனால், பல ஆதாரமற்ற கதைகள் பரப்பப்படுகின்றன. அவர் கொல்கத்தா சென்று பா.ஜ.க தலைவர்களை சந்தித்தார் என்பது தெளிவாகிறது. அவர் பா.ஜ.க-வில் இணையும்போது எல்லாம் தெளிவாகும்” என்று ஜே.எம்.எம் தலைவர் ஒருவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“