டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளரை வெள்ளிக்கிழமை (நவ.4) அறிவித்தார்.
அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய இணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் பத்திரிகையாளருமான இசுதன் காத்வி, குஜராத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்ய மாட்டோம்.
பகவந்த் மான் முதலமைச்சர் வேட்பாளராக பஞ்சாப் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர், ஆம் ஆத்மி கட்சியால் அல்ல. அதேபோல் குஜராத்திலும் மக்களிடம் கருத்து கேட்டு அறிவித்துள்ளோம்.
மேலும், இன்று ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அடுத்த குஜராத் ஆட்சிக்கான முதலமைச்சரை அறிவிக்கிறோம்.
இதற்காக கடந்த வாரம் நாங்கள் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டிருந்தோம். அதன்படி, 16,48,500 பதில்கள் வந்தன, அவர்களில் 73 சதவீதம் பேர் இசுதன்பாய் காத்வியை தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றார்.
இசுதன் காத்வி விடிவி குஜராத்தி என்ற சேனலில் வேலை பார்த்து வந்தார். அங்கு மகாமந்தன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ஊடக துறையில் இருந்து விலகி, ஆம் ஆத்மியில் இணைந்தார்.
அப்போது தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில், “தன்னை காங்கிரஸ் மற்றும் பாஜக தங்களது கட்சியில் இணைய அறிவுறுத்தியதாக கூறினார்.
இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த காத்வி, குஜராத்தின் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். காத்வி, தாம் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவரது தாயார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
அரவிந்த் கெஜ்ரிவால் உரை தொடங்கும் முன்பு பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. அதன்பின்னர், ஒரு நிமிடம் மோர்பி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil